கோவில்கள்

நல்வாழ்வு அருளும் பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோவில்

Published On 2023-02-18 06:33 GMT   |   Update On 2023-02-18 06:33 GMT
  • குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும்.
  • இந்த கோவில் தல விருட்சம் நாகலிங்க மரமாகும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ள கோவிலாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உள்ளது.

திருமணத்தடை நீக்கி குழந்தை பேறு அளிக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலை பக்தர்கள் நல்வாழ்வு அருளும் நாடியம்மனாக மனதில் வைத்து வழிபட்டு வருகிறாா்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி வரும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறாா்கள்.

அம்மன் சிலை

தற்போது நாடியம்மாள்புரம் என்று அழைக்கப்படும் இத்தலம் முற் காலத்தில் பெரிய வனமாக விளங்கியது. அக்காட்டிலே தஞ்சையை ஆண்ட மன்னர் வேட்டையாடுவதற்காக வந்தார். மன்னரும் மந்திரியும் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது ஒரு மான் துள்ளிக் குதித்து ஓடி புதருக்குள் சென்று மறைந்தது. அப்போது வேடர்கள் சிலர் முயலை துரத்திச்சென்று புதரை வெட்ட அந்த புதரில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

இதனால் பதற்றமடைந்த வேடர்கள் புதரை விலக்கி பார்த்தபோது அந்த புதருக்குள் அம்பாள் சிலை ஒன்று இருந்தது. இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த வேடர்கள் அம்மன் சிலையின் நெற்றியில் காயம் பட்டு அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதை கண்டு மயக்கம் அடைந்தனர். உடனே அங்கு சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்த மன்னர், அம்பாளுக்கு அதே இடத்தில் கோவில் கட்ட உத்தரவிட்டு மானியமாக நிலங்களையும் வழங்கினார்.

ஐம்பொன் சிலை

அக்காலத்தில் வீரமாநகர் என்ற பட்டுக்கோட்டையில் சிறந்த பக்திமானாகவும், செல்வந்தராகவும் விளங்கிய சின்னான் என்பவரிடம் அம்பாளுக்கு கோவில் கட்டும் பொறுப்பை அரசர் ஒப்படைத்தார்.

நாடியம்பாளுக்கு கோவில் கட்டி நடராஜர் என்பவர் பூஜை நடத்த சின்னான், நாடியம்பாளை குலதெய்வமாகக் கொண்டு வணங்கி வழிபட்டு வந்தார். நாடியம்மனுக்கு அவர் ஐம்பொன் சிலை வார்த்து ஆராதித்தார். மேலும் இந்த கோவிலில் தீர்த்தக்குளம் உருவாக்கப்பட்டது.

பங்குனி திருவிழா

பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் காப்புக் கட்டி திருவிழா தொடங்கி 12 நாட்கள் அம்பாள் வீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த 12 நாட்களும் பட்டுக்கோட்டை நகரமும் அதன் சுற்றுவட்டார கிராமங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த 12 நாள் திருவிழாவில் 6-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் நாடியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி செட்டியார் தெருவில் வரகரிசி மாலை போடும் விழா ெவகுவிமரிசையாக நடைபெறும்.

நாடியம்மனுக்கு காப்புக் கட்டியதும் பட்டுக்கோட்டை வாழ் மக்கள் பாயில் படுக்க மாட்டார்கள். நகரில் செக்கு ஆட்ட மாட்டார்கள். உலக்கை சத்தம் கேட்காது. அந்த அளவுக்கு மக்கள் பயபக்தியுடன் இருப்பார்கள். பட்டுக்கோட்டையிலும், சுற்றுப்புறப் பகுதியிலும் நாடிமுத்து, நாடியான், நாடியம்மை என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பது அதிகம் உண்டு. நாடியம்மன் கோவில் சில காலம் பரம்பரை அறங்காவலர்களின் பொறுப்பில் இருந்து தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

நாயக்க மன்னர்கள்

முற்காலத்தில் அடர்ந்த வனமாக விளங்கிய பட்டுக்கோட்டை தற்போது நாடியம்மன் அருளால் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இன்று ஒரு பெரிய நகரமாக விளங்குகிறது. பட்டுக்கோட்டை நாடியம்மனை தேடி வரும் பக்தர்கள் கோடி நன்மை பெறுவார்கள் என்பது சான்றோர் வாக்கு. 1676-ம் ஆண்டுக்கு முன்பு பட்டுக்கோட்டையை நாயக்கர் மன்னர்கள் ஆண்டு வந்தனர்.

பட்டுக்கோட்டையை ஆண்ட நாயக்கர்களில் ஒருவர் பாளையக்காரரான பட்டு மழவராய நாயக்கர். இவர் பெயரால்தான் பட்டு மழவராயன் கோட்டை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி பின்னாளில் பட்டுக்கோட்டை என பெயர் பெற்றது.

இங்கு சோழர் காலத்தில் சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் கட்டப்பட்டன. பின்னர் வந்த நாயக்கர் காலத்தில் தான் நாடியம்மன் புகழ் பரவ தொடங்கியது என கூறப்படுகிறது. நாயக்க மன்னர்களில் ஒருவரான ராமப்ப நாயக்கர், இந்த கோவிலின் கருவறை கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழைய கோவிலில் முன் மண்டப அமைப்பு முற்றிலும் நாயக்கர் கலைப் பாணியை தழுவி உள்ளது. முற்காலத்தில் வளைவான செங்கற்கள் சுண்ணாம்பு கொண்டு வலிமையாக கோவில் கட்டப்பட்டிருந்தது. இன்று இக்கோவில் முழுமையாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால் பழைய சின்னங்கள் அழிந்து விட்டன.

குழந்தை பேறு அருளும் கோவில்

கி.பி. 1740-ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்ம மகாராஜா நாடியம்மன் புகழை கேள்விப்பட்டு கோவிலுக்குத் திருப்பணி செய்தார். மேலும் அம்மன் உற்சவ திருமேனி, தேர் போன்றவை செய்யப்பட்டன. மாலிக்காபூர் படையெடுப்பின்போது பட்டுக்கோட்டை தாக்கப்பட்டு சிவன், பெருமாள் கோவில்களும் சேதம் அடைந்தன.

நாடியம்மன் உற்சவர் சிலை மறைக்கப்பட்டு மராட்டியர் ஆட்சிக்கு வந்த பிறகு இச்சிலை செட்டித்தெரு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பட்டுக்கோட்டை நகரின் குலதெய்வமாக விளங்கும் நாடியம்மன், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தெய்வமாகும். குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும். இந்த கோவில் தல விருட்சம் நாகலிங்க மரமாகும்.

குடமுழுக்கு

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முற்காலத்தில் பெரிய ஏரியாக இருந்த நாடியம்மன் கோவில் குளம் தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி ஓடை போல காட்சி அளிக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரகரிசி மாலை போடும் விழா

கானகத்தில் கற்சிலையாக கிடைத்த நாடியம்மனுக்கு பொற்சிலை வடித்துக் கொடுத்தார் சின்னான். நாடியம்மனின் அருளால் மாதம் மும்மாரி பொழிந்து வரகுப்பயிர் வளமுடன் விளைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த சின்னான், அம்பிகையே உன்னருளால் எனது காணியில் வரகு விளைந்து வீடு கொள்ளாத அளவுக்கு நிறைந்துள்ளது. உன் அருள் நாடி வந்த எனக்கு செல்வத்தை கோடி, கோடியாய் குவிக்கிறாய். ஆனால் நான் உனக்கு எதை கொடுப்பது? எதை விடுப்பது? என்று தவிக்கிறேன் என்று அம்பாளை வேண்டினார்.

அப்போது அம்பாள், சின்னானின் கனவில் தோன்றி எனக்கு வரகு அரிசியினாலேயே மாலை தொடுத்து போடு என்று ஆணையிட்டாராம். அன்று முதல் சின்னான் வசித்து வந்த செட்டியார் தெருவில் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி, மூன்றாம் செவ்வாய் இரவு அம்பாள் மகா மண்டபத்துக்கு எழுந்தருளி தினமும் வீதி உலாவும், ஆறாம் நாள் ஞாயிறு காலை சரஸ்வதி தரிசனம், இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் மகா மண்டபத்தில் இருந்து அம்மன் எழுந்தருளி செட்டியார் தெருவில் அம்பாளுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் விழா அதி விமரிசையாக நடைபெறும். இந்த விழாவைக்காண மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு செல்வது எப்படி?

சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பஸ் அல்லது காரில் பட்டுக்கோட்டைக்கு வந்து பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீ்ட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று நாடியம்மனை தாிசிக்கலாம்.

Tags:    

Similar News