சிறப்பான வாழ்வு தரும் சிலம்பியம்மன் திருக்கோவில்
- இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது.
- இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது.
கிராமப்புறங்களில் இருக்கும் கோவில்களில் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கும். அதிலும் சின்னஞ்சிறு கோவில்களில் இருக்கும் சிறப்பம்சங்களை பார்க்கும் போது, அவற்றில் சில வியப்பை அளிக்கலாம். கிராம தெய்வங்கள், கிராம காவல் தெய்வங்கள் என்று மக்கள் பல்வேறு விதமாக சிறு தெய்வங்களை கொண்டாடி வருகிறார்கள். அப்படியொரு சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றுதான், கடலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலம்பிமங்கலத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன் திருக்கோவில்.
சிலம்பிமங்கலம் கிராமத்தில் அடர்ந்த முந்திரிக்காடு மத்தியில் பயணித்தால், ஒரு பெரிய மணல் மேடு வரும். இந்த மணல் திட்டு 10 அடி உயரம் உள்ளது. கால்கள் மணலுக்குள் புதைய நடந்து சென்றால், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் தான், சிலம்பியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. முன்னதாக நம்மை வரவேற்கும் வகையில் ஆலயத்தின் முகப்பு வளைவு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வளைவிலும் சிலம்பியம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
கோவிலுக்குள் சென்றால் மகா மண்டபம், அதன் மேற்கூரையின் நடுவில் சிலம்பியம்மன் உள்பட 7 அம்மன்களை நாம் தரிசிக்கலாம். அதைக் கடந்து சென்றால், திரிசூலம், பலிபீடம், அம்மனின் வாகனமான சிம்மம் ஆகியவை உள்ளன. கருவறையில் சிலம்பியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவருக்கு வலதுபுறம் 3 அம்மன்களும், இடதுபுறம் 3 அம்மன்களும் அருள்பாலிக்கிறார்கள்.
தல வரலாறு
இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. அதனால் இது மிகவும் தொன்மையான ஆலயம் என்பது புலனாகிறது. ஒரு முறை தில்லை எனப்படும் சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கும், தில்லை காளிக்கும் நடனத்தில் போட்டி உண்டானது. அப்போது ஈசனுடன், ஆக்ரோஷமாக நடனம் ஆடினாள், 16 கரங்களைக் கொண்ட தில்லைக்காளி அம்மன். அவளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவளது காலில் இருந்து சிலம்பு ஒன்று கழன்று சீறிப்பாய்ந்து ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடம்தான் சிலம்பிமங்கலம் என்று தல புராணம் சொல்கிறது. சிலம்பிமங்கலத்தில் விழுந்த அந்த சிலம்பு உடைந்து அதில் இருந்த 7 முத்துக்களும் சிதறி விழுந்தன. அவற்றில் இருந்து 7 அம்மன்கள் தோன்றினர்.
நடுநாயகமாக கையில் சிலம்போடு சிலம்பியம்மனும், அவளுக்கு வலது புறத்தில் பிரம்ஹி, வைஷ்ணவி, ருத்ராணி ஆகியோரும், இடதுபுறத்தில் கவுமாரி, வாராகி, இந்திராணி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த அம்பாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய 7 சக்திகளும், நாங்கள் மணல் திட்டின் மேல் வீற்றிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி, ஊர்மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேல் பகுதியில் அமர்ந்த கோலத்தில் 7 அம்மன் சிலைகள் காணப்பட்டன.
மேலும் சிலம்பியம்மனுக்கு கோவில் அமைக்க அந்தப் பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக அம்மன் சிலைகள் கிடைத்த இடத்திலேயே, ஆலயத்தை நிறுவலாம் என்று நினைத்தனர். அதற்காக பள்ளம் தோண்டியபோது, விநாயகர், நந்தி, ஆஞ்சநேயர், அங்காளம்மன், எருமை வாகனத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, மணிமேகலை, பாவாடைராயன், நாககாளி, கருமாரியம்மன், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆகியோரது திருவுருவச் சிலைகளும் பூமிக்கு அடியில் இருந்து வெளிப்பட்டதை கண்டு மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள். அதன்பின்னர் இங்கு அம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மனை குலதெய்வமாகவும், ஊரின் காவல் தெய்வமாகவும் இங்குள்ள மக்கள் பலரும் வணங்கி வருகின்றனர். இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான விவசாயமாக இருக்கிறது. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி, இப்பகுதி மக்கள் அனைவரும் இத்தல அன்னையிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். அம்மனும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்றளவும் அமோகமான விளைச்சலை தந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், இப்பகுதி விவசாயிகள் முந்திரியால் ஆன மாலையை அம்மனுக்கு அணிவித்து தங்களின் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.
இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரம் இத்தலத்தின் சிறப்புக்குரியதாகும். திருமணம் தடைபடும் பெண்கள், 'ஓம் சக்தி.. பராசக்தி..' என்று உச்சரித்தபடியே இந்த ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில் அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன், தில்லை காளியின் மறு வடிவமாகவே இந்தப் பகுதி மக்களால் பார்க்கப் படுகிறார். இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது. அதாவது இந்த ஆலய சன்னிதிகளில் அருள்பாலிக்கும், தெய்வ சிலைகள் அனைத்தும், இந்த ஆலயம் இருக்கும் பூமியின் அடியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டவை. இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எந்த தெய்வச் சிலைகளும், வெளியில் இருந்து கொண்டுவரப்படவில்லை என்பதே இந்த புண்ணிய பூமியின் சிறப்பை எடுத்துக்கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஊர் கட்டுப்பாடு
வைகாசி மாதம் 1-ந் தேதி முதல் பத்து நாள் உற்சவம் இக்கோவிலில் நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வு தொடங்கி 10-ம் நாள் காப்பு களையும் வரை, இந்த ஊரில் வசிக்கும் யாரும் வெளியூர் செல்லக்கூடாது. வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும், காப்பு கட்டும் நிகழ்வுக்கு முன்பாக ஊருக்குள் வந்துவிட வேண்டும் என்பது நடைமுறை வழக்கமாக இருக்கிறது. இதை யாரும் மீறுவதில்லை என்கிறார்கள். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும், சிலம்பியம்மன் மட்டுமே உற்சவராக ஊருக்குள் வீதி உலா வருவார். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை நிறைவேறியதற்காக இங்கு பலவிதமான நேர்த்திக் கடனை செய்கிறார்கள்.
இது தவிர ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.
அமைவிடம்
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது, சிலம்பிமங்கலம். அங்கிருந்து கோவில் இருக்கும் மணல் திட்டுக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.
-பொ.பாலாஜிகணேஷ்,
சிதம்பரம்.