கோவில்கள்

2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த தாணுமாலயன் கோவில்

Published On 2023-01-05 07:20 GMT   |   Update On 2023-01-05 07:20 GMT
  • பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.
  • முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.

குமரி மாவட்டத்திலேயே மிக புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகள் முன்னாலேயே தொடங்குகிறது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.

மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், விஜயநகர மன்னர்கள், திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள் பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்

கொன்றையடி மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.

வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவேங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக கல்வெட்டுகள் சாட்சியம் அளிக்கிறது.

மணிமண்டபம்

1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும்.

வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ராஜகோபுரம்

1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ்தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார்.

அதனால் அது "நீலகண்ட விநாயகர்" என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

பெண் உருவில் விக்னேஸ்வரி விநாயகர்

கோவிலின் நவக்கிரக மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள நீலகண்ட விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த விநாயகர் மகா கணபதி, முக்குறுணி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சுமார் 6 அடி உயரமுடைய இந்த விநாயகரின் சிலையமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. தெற்குமண்மடம் ஸ்தானிகராக விளங்கிய நீலகண்டரு என்பவர் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்ததால் அவரது பெயராலேயே நீலகண்ட விநாயகர் அழைக்கப்படுகிறார். இதேபோல் செண்பகராமன் மண்டபத்தில் விநாயகர் பெண் உருவில் காட்சி அளிக்கிறார். மண்டப தூணில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண் உருவில் இருப்பதால் இவரை விக்னேஸ்வரி விநாயகர் என அழைக்கிறார்கள். பெண் உருவில் உள்ள விநாயகரை வழிபடுவது நன்மையை கொடுக்கும்.

Tags:    

Similar News