உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில்
- இந்த பெரியகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
- தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தஞ்சை மட்டும் அல்லாது, தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சினடியார்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உலக பாரம்பரிய சின்னம்
தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில இருந்து வருகிறது. மேலும் இந்த கோவில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் 1987-ம் ஆண்டு யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறவிக்கப்பட்டது. இந்த கோவில் தமிழர்களின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியகோவில் பெயர்க்காரணம்
தஞ்சை பெரிய கோவில், பெருவுயைடார் கோவில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவில் ராஜராஜேஸ்வர கோவில் என்றும் ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொடக்க காலத்தில் ராஜராஜேஸ்வரம் என்று பின்னர் தஞ்சை பெருவுடையார் கோவில் என்றும், 17, 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
1000 ரூபாய் நோட்டு, தபால்தலை வெளியீடு
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அதில் தஞ்சை பெரிய கோவிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.
1995-ம் ஆண்டில் மத்திய அரசு மாமன்னன் ராஜராஜசோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையும் வெளியிடப்பட்டது. மேலும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது தஞ்சை பெரிய கோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் உருவம் பொறித்த நாணயமும் வெளியிடப்பட்டது.
தஞ்சை பெரியகோவில்விழாக்கள்
தஞ்சை பெரியகோவிலில் பிரம்மோற்சவம், மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா, அன்னாபிஷேகம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை, பிரதோஷம், சிவராத்திரி, தேரோட்டம் ஆகியவை கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
ஓவியங்கள்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன், விஜயராகவ நாயக்கர், 2-ம் சரபோஜி, அவர் மகன் சிவாஜி ஆகியோர் காலத்து ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள அறையில் ராஜராஜன் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் வழிபடுதல். சுந்தரரும், சேரமான் பெருமாளும் யானையிலும், குதிரையிலும் கயிலை செல்லுதல், இந்த இருவரும் கயிலையில் சிவபெருமான், உமாதேவியோடு நாட்டியம் காணுதல், கயிலையைப் பெயர்க்கும் ராவணன் போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அதேபோல நாயக்கர் மற்றும் மராட்டியர் கால ஒவியங்களையும் இந்த கோவிலில் காணலாம்.
பெரியகோவில் தேரோட்டம் பற்றி மோடி ஆவண குறிப்பு
சித்திரை தேரோட்டம் பற்றிய குறிப்புகள் முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் மராத்தியர் ஆட்சி கால மோடி ஆவண குறிப்புகள் சில மட்டுமே கிடைக்கின்றன. இதன்மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பெரியகோவிலுக்கு மன்னர் இரண்டாம் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கி தந்தது மட்டுமல்லாமல் 4 ராஜவீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார். தஞ்சையில் கி.பி. 1776-ம் ஆண்டில் 20,200 பேர் இழுத்து தேர் உலா வந்ததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1818-ம் ஆண்டில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேரை இழுப்பதற்காக பல வட்டங்களில் இருந்து 27,394 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2,800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் என தேருக்காக 26,494 பேரும், வாகனங்களை தூக்குவதற்காக திருவையாறில் இருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவண குறிப்புகள் தெரிவிக்கின்றன.