கோவில்கள்

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்

Published On 2022-12-24 04:37 GMT   |   Update On 2022-12-24 04:37 GMT
  • இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு சிவாலயங்கள் புராதான பெருமையோடு உள்ளன. சிறப்புமிக்க இந்த கோவில்களில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலும் ஒன்று.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களால் பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 9-வது தலமாக உள்ளது.

அக்னி பகவானுக்கு யாகங்களால் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க வேண்டி திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளி உள்ள இறைவனை வேண்டியுள்ளார்.

இறைவன் கட்டளைப்படி இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் என்ற தீர்த்த குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்க பெற்றுள்ளார்.

வயிற்று நோய்கள்

மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்துக்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவனும் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார்.

அன்று முதல் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோவில் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

தலவிருட்சம்

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்திரன், பெருமாள், சூரியன், பிரம்மன், அக்னி தேவன், பகிரதன், ரோமரிஷி சித்தர், ஆகியோர் எழுந்தருளி உள்ள‌னர். கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளது.

கோவில் தீர்த்தமாக அக்னி தீர்த்தம், காவிரி நதி தீர்த்தம் உள்ளது. அக்னி தீர்த்தம் இருந்த இடத்தில் தற்போது சிறிய கிணறு வடிவில் அக்னி தீர்த்த கிணறு உள்ளது. அக்னீஸ்வரர், அழலாடியப்பர், தீயாடியப்பர், வன்னிவனநாதர், திருக்காட்டுப்பள்ளி உடையார் என்றும் அழைக்கப்படுகிறாா்.

ரோமரிஷி சித்தர்

பண்டைய கால சித்தர்களில் ஒருவரான ரோமரிஷி என்பவர் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரரை வழிபட்டு சித்தி அடைந்துள்ளார். கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ரோமரிஷி சித்தர் இறைவனை மலர் கொண்டு பூஜை செய்வது போன்ற விக்ரகம் அமைந்துள்ளது. இதைப்போல பிரம்மதேவன் மகா சிவராத்திரி தினத்தன்று மூன்றாம் காலத்தில் எழுந்தருளியுள்ள அக்னீஸ்வரரை வழிபட்டு இறையருள் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

ரோமரிஷி சித்தர் வழிபடுவது போல் சிவலிங்கம் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இங்குள்ள அக்னீஸ்வரர் ரோமரிஷி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தட்சிணாமூர்த்தி

இந்த கோவிலில் உள்ள அம்பாள் சவுந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறார். அம்பாளுக்கு தனியாக சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளான தட்சிணாமூர்த்தி, திருமால், லட்சுமி, வலம்புரி விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், ரோமரிஷி சித்தர் வழிபடும் சிவலிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, அகோர வீரபத்திரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் சரஸ்வதி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

இந்த கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழே உள்ள துவாரத்தின் வழியாக கர்ப்பக்கிரகத்தை சுற்றியுள்ள பிரகாரத்தில் புடைப்புச்சிற்பமாக காணப்படும் யோக தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

துர்க்கை அம்மனுக்கு வழிபாடு

கர்ப்ப கிரகத்தின் பிரகாரத்தில் அமைந்துள்ள யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு அவ்வப்போது நடைபெறும். இந்த கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இறைவன், இறைவியை திருமணம் செய்து கொண்ட நாள் பங்குனி உத்திர நாள் என்பதால் இங்கு பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும்.

குடமுழுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் அய்யப்பனுக்கு தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விஷுக்கனி தரிசனம் நடைபெறும். மார்கழி மாத முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் அய்யப்ப பஜனை நடைபெறும். இக்கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது குடமுழுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

அக்னி தீர்த்த சிறப்பு

இந்த கோவில் தீர்த்தமாக தற்போது திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகில் மிகச் சிறிய அளவில் அக்னி தீர்த்தம் அமைந்துள்ளது. அக்னிதீர்த்தத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், மாசி மாத மக நட்சத்திரம், பங்குனி மாத உத்திராட நட்சத்திரம், வைகாசி மாத பவுர்ணமி திதி ஆகிய நாட்களில் நீராடி அகனீஸ்வரரை வழிபடுபவர்கள் இந்த பிறப்பில் எல்லா செல்வங்களும், மறு பிறப்பில் நற்பிறப்பும் பெற்று குற்றம் எல்லாம் தீர்ந்து பெருமையுடன் வாழ்வார்கள் என்பது அக்னி தீர்த்த சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

கோவிலில் நடைபெறும் விழாக்கள்

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் அனைத்து மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுவது சிறப்பாகும். சித்திரை மாதத்தில் முதல் நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு அக்னி தீர்த்தத்திலும், காவிரி ஆற்றிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி. வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்கு சந்தன காப்பு அபிஷேகம். சித்திரை சதயத்தன்று நாவுக்கரசர் குருபூஜை, வைகாசி மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்தர் குருபூஜை.

ஆனி மாதம் மகத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை, உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் திருமஞ்சனம் மற்றும் சாமி புறப்பாடு. ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று துர்க்கை அம்மனுக்கு மகா சண்டியாகம். ஆடி அமாவாசை நாளில் சாமி புறப்பாடு மற்றும் ஆடி 18-ந் தேதி சுவாமி புறப்பாடு, தீர்த்தவாரி. ஆடிப்பூரத்தன்று அம்மன் எழுந்தருளல், ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் உள்ள அனைத்து மூர்த்தங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம்.

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா. புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் தினசரி கொலு அலங்காரம், நிறைவுநாளில் லட்சார்ச்சனை, பஞ்சமுக அர்ச்சனை மற்றும் நவசக்தி அர்ச்சனை. ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா. ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம். கார்த்திகை மாதத்தில் சோமவார வழிபாடு. திருக்கார்த்திகை நாளில் அகன்ற தீபம் ஏற்றுதல். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா. தை மாதத்தில் உத்திராண்ய புண்ணிய காலத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி. தை அமாவாசை மற்றும் தைப்பூசத்தன்று சாமி புறப்பாடு, தீர்த்தவாரி. தை கடைசி வெள்ளி அன்று 108 திருவிளக்கு பூஜை, மாசி மாதம் மகத்தில் சாமி புறப்பாடு, பங்குனி உத்திரத்தை ஒட்டி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

கோவிலுக்கு செல்லும் வழி

அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் ரெயிலில் தஞ்சை வந்து அங்கிருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு சென்று பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சையை அடைந்து மேற்கண்ட வழித்தடத்தில் பயணித்து கோவிலை அடையலாம்.

Tags:    

Similar News