கோவில்கள்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோவில்

Published On 2022-12-26 06:59 GMT   |   Update On 2022-12-26 06:59 GMT
  • இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
  • ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

உற்சவர் - கல்யாண ஜெகந்நாதர்

அம்மன் - கல்யாணவல்லி, பத்மாசனி

தல விருட்சம் - அரசமரம்

தீர்த்தம் - ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்

முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப் பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ர தரியாய் அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம். பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. "தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்".

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஆதி ஜெகநாதர் கோவிலும் ஒன்றாகும். ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர். பஞ்ச தரிசனம்பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

பொதுவாகப் பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி) காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

தாயாருக்குப் புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

கோவில் திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:15 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.

Tags:    

Similar News