கோவில்கள்

கோவில், வீழிநாதர், சுந்தர குஜாம்பிகை

திருமண வரம் அருளும் திருவீழிமிழலை வீழிநாதர் திருக்கோவில்

Published On 2023-04-20 04:56 GMT   |   Update On 2023-04-20 04:56 GMT
  • இந்த கோவில் திருமண வரம் அருளும் முக்கிய கோவிலாக உள்ளது.
  • தேவார பாடல் பெற்ற 61-வது தலமாக உள்ளது.

திருவாரூா் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் பிரசித்தி பெற்ற வீழிநாதர் கோவில் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் முக்கிய ஆலயமாக உள்ள இந்த கோவில் திருமண வரம் அருளும் முக்கிய கோவிலாக உள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவீழிமிழலை வீழிநாத சாமி கோவில், சோழவள நாட்டில் காவிரி நதியின் தென்கரையில் உள்ள தேவார பாடல் பெற்ற 61-வது தலமாக உள்ளது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

வவ்வால் நத்தா மண்டபம்

திருவீழிநாதர் கோவிலுக்கு வடக்கு பக்கம் கிழக்கு நோக்கி அம்மனுக்கு தனிக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் கிழக்கு முன் நுழைவாயில், கோபுரம் இல்லாத அமைப்பை உடையது. இந்த வாயிலை கடந்து சென்றால் வடபுறம் வவ்வால் நெத்தி மண்டபம் என்ற திருக்கல்யாண மண்டபம் உள்ளது.

இந்த மண்டபத்தை வவ்வால் நத்தா மண்டபம் என அழைக்கின்றனர். அதாவது வவ்வால் வந்து தங்க முடியாத மண்டபம் என்ற பொருளில் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கூறுகிறார்கள். 175அடி நீளம், 75 அடி அகலம் கொண்ட இந்த மண்டபத்தின் நடுப்பகுதி வவ்வால் நெற்றி அமைப்பில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. இதன் கிழக்கு மேற்கு பக்கங்களில் மூன்று வரிசையில் தூண்கள் உள்ளன. இது கட்டிட வேலைப்பாட்டில் ஒர் அபூர்வ அமைப்பாகும்.

விண்ணிழி விமானம்

இக்கோவிலின் முதல் கோபுர வாசல் 80 அடி உயரமும், 3 தலங்களும், 5 கலசங்களும் கொண்டு சுதை சிற்பங்களுடன் விளங்குகிறது. ராஜகோபுர வாசலை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி, திரு மூல நாதர் கோவில் ஆகியவை உள்ளன.

நடுப்பிரகாரத்துக்கு மேற்கு பகுதியில் படிக்காசு விநாயகர் கோவில் உள்ளது. அதன்பின்புறத்தில் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருஉருவங்கள் தெற்கு நோக்கி உள்ளன. உட்பிரகாரத்தில் வீழிநாதர் உட்கோவில் மாடக்கோவில் அமைப்பில் உயரமாக திகழ்வதை காணலாம். இப்பகுதியே விண்ணிழி விமானம் ஆகும்.

16 சிம்மங்கள்

இது 16 சிம்மங்களை தாங்குவது போல அமைந்துள்ளது. இந்த விண்ணிழி விமானத்தை விண்ணுலகில் இருந்து திருமால் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் சுயம்பு லிங்கம் ஆகும். மூலவரின் பின்புற சுவரில் சிவபெருமானும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறாா்கள். இது வீழிநாதர் கார்த்தியாயினியை திருமணம் புரியும் வரலாற்றை கூறும் வகையில் கர்ப்பகிரகத்தின் நடுவில் அமைந்துள்ளது.

அம்பாள் சன்னதி

திருவீழிமிழலை வீழிநாதா் கோவிலில் அம்பிகைக்கு தனிக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் சுந்தர குஜாம்பிகை அழகு திருமேனியில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாா். திருமால் கைலாயத்தில் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசித்த பின் அவரிடம் ஒரு கோரிக்கை விடுத்தாா். எனது சக்கரம்(திருமாலின் சக்கரம்) வலு குன்றியிருக்கிறது. எனவே சிவபெருமானாகிய தாங்கள் அரக்கனை வதம் செய்தபோது பயன்படுத்திய சக்கரத்தை எனக்கு(திருமாலுக்கு) அளிக்க வேண்டும் என கூறினார்.

அப்போது சிவபெருமான், திருமாலிடம் காவிரிக்கு தெற்கே உள்ள தேஜிநீவனம் என்ற தலத்தை அடைந்து என்னை பூஜிப்பாயாக! என கூறி அருள் புரிந்தார். திருமால் காவிரி தென்கரை வழியே வந்து இத்தலத்தை (திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலை) அடைந்து பத்மதீர்த்தம் அமைத்து அதில் செந்தாமரைகளை உருவாக்கினாா்.

ஆயிரம் தாமரைப்பூக்கள்

பின்னர் விண்ணுலகத்தில் இருந்து தான் எடுத்து வந்த விண்ணிழி விமானத்தில் ஈசனை எழுந்தருள செய்து தினமும் ஆயிரம் தாமரைப்பூ

கொண்டு பூஜை செய்து ஈசனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் பூஜை செய்தபோது இறைவனின் திருவிளையாடலால் ஒரு பூ குறைய மறுமுறையும் எண்ணிப்பார்த்தார்.

அப்போதும் ஒரு பூ குறைய தாமரை மலருக்கு பதிலாக தனது வலது கண்ணை பறித்து திருவடியில் சாத்தினார். திருமாலின் பக்தியை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் உடனடியாக அவர் கேட்ட சக்கரத்தை வழங்கினாா்.

குழந்தை வரம்

சிறந்த சிவ பக்தரான காத்தியாயன முனிவர் தனது மனைவியுடன் இந்த ஆலயத்துக்கு வந்து ஈசனையும், அம்பிகையையும் வணங்கி அருந்தவம் புரிந்தார். குழந்தை பாக்கியம் இல்லாததால் அரிய வேள்வியும் செய்தார்.

அப்போது அங்கு வந்த உமையவள், அன்னபூரணியாக காட்சி அளித்து முனிவரே! தாங்கள் விரும்பிய வரத்தை கேட்கலாம் என கூறினார். அப்போது முனிவர், தாயே... நீயே எனது புத்திரியாக(மகளாக) வரவேண்டும் என கூறினார்.

திருமணக்கோலம்

இறைவி முனிவருக்கு அந்த வரத்தை அளித்தார். காத்தியாயன முனிவர் மனைவி சுமங்கலை இருவரும் அருகில் உள்ள தீர்த்த புஷ்கரணிக்கு வந்த போது பெரிய நீலோர்பல மலரில் அம்பிகை அழகிய குழந்தை வடிவில் திகழ்ந்தார். அக்குழந்தையை எடுத்து வந்து கார்த்தியாயினி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். கார்த்தியாயினி திருமண பருவம் வருவது அறிந்து முனிவர் பரமனை வேண்டி தவம் புரிந்தார். இறைவன், காத்தியாயன முனிவரின் தவத்தை கண்டு மணம் இறங்கி வெளிப்பட்டார்.

அப்போது பெருமானே! இக்கன்னிகையை தாங்கள் மணக்கோலத்தில் வந்து திருமணம் செய்ய வேண்டும் என பிரார்த்தித்தார். இதனால் இறைவன் சித்திரை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் கார்த்தியாயினியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

பொற்காசுகள்

இதன்படி திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா நடக்கிறது. உமையம்மை இறைவனை திருமணம் செய்து கொள்ள தவம் இருந்து தம் எண்ணம் ஈடேறிய தலம் இது ஆகும். எனவே திருமணம் ஆகாத பெண்கள் இத்தலத்துக்கு வந்து கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. ஒரு காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் சிவனடியார்களுக்கு தினசரி பொற்காசுகளை படிக்காசுகளாக திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோருக்கு இத்தலத்தில் இறைவன் வழங்கி சிவனடியார்களின் பஞ்சத்தை போக்கியதாகவும் வரலாறு கூறுகிறது.

12 மாதமும் உற்சவங்கள்

திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் சித்திரை மாதம் திருக்கல்யாணம், வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி வெள்ளி, ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகை மாதம் சோமவாரம், கார்த்திகை மகாதீபம், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவம், தை மாதம் பொங்கல், கிருத்திகை, தைப்பூசம், மாசி மாதம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், இது தவிர பிரதோஷத்தன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் 12 மாதமும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும்.

இக்கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும். தல விருட்சம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலாமரம் ஆகும். தினமும் 6 கால பூஜைகள் இந்த கோவிலில் நடக்கிறது.

கோவிலுக்கு செல்வது எப்படி?

இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வர வேண்டும். பின்னர் கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவிலுக்கு சென்று நாச்சியார்கோவிலில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழித்தடத்தில் பயணித்து திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலை அடையலாம்.

Tags:    

Similar News