விஜயநாதேஸ்வரர் திருக்கோவில்- திருவிசயமங்கை
- கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். அர்ச்சுனன் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஆலயம் 'விஜயநாதேஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு 'விஜயன்' என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், 'சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக வெல்லலாம்' என்று கூறினார்.
இதையடுத்து அர்ச்சுனன் வனத்திற்குள் சென்று, சிவனை நினைத்து தவம் இருந்தான். அவனது தவத்தை கலைப்பதற்காக, முகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் அனுப்பினான். பன்றி வடிவில் வந்த அந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயற்சித்தான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன், அந்த பன்றியை தன்னுடைய அம்பால் வீழ்த்தினான். அதே நேரம் இன்னொரு அம்பும் அந்த பன்றியை துளைத்திருந்தது. அர்ச்சுனனை நோக்கி வந்த வேடன் ஒருவன், தான்தான் அந்த பன்றியை வீழ்த்தியதாக கூறினான். அதில் வேடனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கோபம் அதிகமாக தன் கையில் இருந்த அம்பைக் கொண்டு அந்த வேடனை, அர்ச்சுனன் தாக்கினான். அப்போது வேடனாக வந்த சிவபெருமான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.
அப்போது ஈசனின் அருகில் நின்ற அம்பாள், "ஐயனே.. ஆயுதங்களில் உயர்ந்த பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவனா?" என்று கேள்வி எழுப்பினாள். அதற்கு சிவன், "அர்ச்சுனன் 'மஸ்ய ரேகை' (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்" என பதிலளித்தார். அப்போது அர்ச்சுனனும், அம்பாளின் முன்பாக பணிவாக குனிந்து நின்று தன்னுடைய கையில் ஓடும் அந்த அதிர்ஷ்ட ரேகையை காண்பித்தான். பின்னர் சிவபெருமானையும், அம்பாளையும் அங்கேயே எழுந்தருளும்படி பணித்தான். ஈசனும் ஒப்புக்கொண்டார். அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்த ஈசன், 'விஜயநாதேஸ்வரர்' என்றும், இந்த திருத்தலம் 'திருவிஜயமங்கை' என்றும் பெயர் பெற்றது.
சோழர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலயத்தின் மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், நுழைவு கோபுரம் சிறியதாகவும் அமைந்துள்ளது. இத்தல அம்பாள் நான்கு கரங்களுடன் காட்சி தரு கிறாள். முன் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரையும், பின் இரண்டு கரங்களில் அட்சரமாலை, நீலோத்பவ மலர் தாங்கியிருக்கிறாள். கோவிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நால்வர் திருமேனிகள் உள்ளன. சிவன் சன்னிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது. ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்களும் வழிபாடு செய்யலாம். இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் பயணித்தால் திருவிஜயமங்கை திருத்தலத்தில் கொள்ளிட ஆற்றின் கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்புறம்பியத்தில் இருந்து 8 கிேலாமீட்டர் தூரத்திலும் ஆலயத்தை அடையலாம்.