சகல பாவங்களையும் தீர்க்கும் திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் திருக்கோவில்
- இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு.
- இறைவியின் பெயர் மரகதாம்பிகை.
எங்கும் நீக்கமற நிறைந்தவரும், தென்னாடுடையவரும், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், தனது பரிவாரங்களோடு எழுந்தருளி உள்ள நடுநாட்டு திருத்தலங்களுள் ஒன்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆகும். 'காடு' என்பது வட மொழியில் 'வனம்', 'ஆரண்யம்' என்ற பெயர்களால் குறிக்கப்படும். புளிய மரத்தை வடமொழியில் 'திந்திரிணி' என்பர். இவ்வூர் புளியமரக் காடுகளால் சூழப்பட்டு இருந்ததால் 'திந்திரிணி வனம்' எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி 'திண்டிவனம்' என்று மாறியது.
இக்காட்டில் இருந்து அருள்புரிந்து வரும் ஈசனை 'திந்திரிணீஸ்வரர்' எனவும், 'திண்டீச்சரமுடையார்' எனவும் பக்தர்கள் அழைத்து பக்தியோடு வழிபட்டு வந்தனர். கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், விமானம் ஆகியவை, வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். உயர்ந்து அமைந்த நெடிய திருச்சுற்று இக்கோவிலுக்கு தனி அழகினைத் தருகிறது.
கோவில் அமைப்பு
நீண்ட கொடிமரம், பலிபீடம், ரிஷபம் ஆகியவற்றை கடந்து சென்றால் கருவறையில் திந்திரிணீஸ்வரர் மிகப்பெரிய மூர்த்தியாக லிங்கமாக காட்சி அளிக்கிறார். இவரது இடது புறத்தில் மரகதாம்பிகை அம்பாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் செல்வகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர். காசி, ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக ஆத்ம ஆஞ்சநேயர் இக்கோவில் பிரகாரத்தில் உள்ளார். கோபுரத்தின் உள் நுழைவு வாசலில் பைரவரும், சூரியனும் உள்ளனர். இந்தக் கோவிலில் அமைந்துள்ள 7 நிலை ராஜகோபுரம் பிரமிடு அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு
இக்கோவில் கி.பி.1015-ம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வம்சத்தை சார்ந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. திந்திரிணீஸ்வரரை திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி, வால்மீகி போன்ற முனிவர்கள் வணங்கி, முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தக் கோவிலில் இறைவன் பஞ்சலிங்க வடிவங்களைக் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானகுரீஸ்வரர், பக்த பிரகலாதீஸ்வரர் ஆகிய 5 திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு. இறைவியின் பெயர் மரகதாம்பிகை. இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்தில் அன்னை மரகதாம்பிகை வேண்டும் வரம் அருளும் தாயாக குடிகொண்டிருக்கிறாள். அம்மனுக்கு பச்சை சேலை சாத்தி வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் தல வரலாறு அங்குள்ள சுவற்றில் தமிழ் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலின் சிறப்பு
திண்டிவனம் நகரின் மையத்தில் உள்ள இக்கோவிலின் சிறப்பை, திருநாவுக்கரசர் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் `கயிலைநாதனை கண்டு பேறு பெறக்கூடிய தலங்களுள் திண்டிவனமும் ஒன்று' என்று சிறப்பித்து பாடியுள்ளார். மரகதாம்பிகை அம்பாளின் திருவுருவமும், கருணை பார்வையும் பக்தர்களுக்கு அருளை வாரி, வாரி வழங்கும் தன்மையாய் உள்ளது. உத்தியோக சிக்கல் நீங்குதல், திருமணம் கைகூடல், வியாபாரம் பெருகுதல், உடல் நலிவு, குழந்தை பாக்கியம் வேண்டி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.
அம்மனை வழிபடும் சூாியன்
மாசி மாத மகா சிவராத்திரி அன்று 4-வது கால பூஜையில் எந்தவித செயற்கை ஏற்பாடும் இன்றி, இயற்கையாக சூரிய ஒளி மரகதாம்பிகை அம்பாள் மீது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படும் அதிசய நிகழ்வும் நடைபெறும். முன்காலத்தில் சிவராத்திரி அன்று 4-ம் கால பூஜையில் சூரிய பகவான் மரகதாம்பிகையை வழிபட்டதாக ஐதீகம்.
முக்கிய திருவிழாக்கள்
சித்திரை பெருவிழா 10 நாட்கள், சித்ரா பவுர்ணமி, ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி 10 நாட்கள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆருத்ரா உற்சவம், ரதசப்தமி, சிவராத்திரி, மாசி மகம், மரகதாம்பிகை அம்பாளுக்கு ஆடி மாதத்தில் சந்தன அலங்காரம், 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது.