கோவில்கள்

பக்தர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றும் உஜ்ஜையினி மாகாளியம்மன்

Published On 2023-02-10 05:01 GMT   |   Update On 2023-02-10 05:01 GMT
  • இந்த அம்மன் கோவிலின் மூலக்கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி பகுதியில் உள்ளது.
  • மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறாள்.

உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களை தன்பக்கம் ஈர்க்கும் சக்தி தஞ்சை மண்ணுக்கு உண்டு. தஞ்சையிலும், தஞ்சையை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஏராளமான பிரசித்திப்பெற்ற கோவில்கள் உள்ளன.

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் உலகமே வியக்கும் பெரியகோவிலை கட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில் கட்டிட கலையிலும், கலை நயத்திலும் சிறந்து விளங்குகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என இக்கோவில் அழைக்கப்படுகிறது. அதேபோல் தஞ்சை மண்ணில் உள்ள சக்தி தலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை ஆகும்.

தஞ்சை கீழவாசல் ஒட்டக்கார தெருவில் அமைந்து உள்ளது உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில். தஞ்சை நாடார்கள் உறவின் முறை தர்மபரிபாலன சங்கத்திற்கு சொந்தமானது இக்கோவில்.

இந்த கோவிலில் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவளாகவும், நம்பிக்கையோடு வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பவளாகவும் அருள்பாலித்து வருகிறாள், உஜ்ஜையினி மாகாளியம்மன்.

மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறாள். மூலவர் சன்னதியின் இரு புறமும் உற்சவர் அம்மன், ஏனாதிநாயனார், வராகி அம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள், ஆஞ்சநேயர், குபேரன், காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் அமைந்து உள்ளன.

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைத்து வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வைக்கிறாள் உஜ்ஜையினி மாகாளி அம்மன். இந்த அம்மன் கோவிலின் மூலக்கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி பகுதியில் உள்ளது.

பிரசித்திப்பெற்ற தஞ்சை கீழவாசல் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவிலில் தற்போது 3-வது குடமுழுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி யானை, குதிரை, கரகாட்டம், கோலாட்டம், மேள, தாளத்துடன் 2 ஆயிரம் பெண்கள் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, வெள்ளை விநாயகர் கோவில் வழியாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

குடமுழுக்கை முன்னிட்டு கோவிலில் 6 கால யாகசாலை பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது.

47 அடி உயர கோபுரம்

மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்திற்கு பிறகு தஞ்சை மாநகரில் 47 அடி உயர கோபுரத்துடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் உஜ்ஜையினி மாகாளிஅம்மன், சான்றோர்(நாடார்) குல பேரரசன் விக்கிரமாதித்தனுக்கு அருள்புரிந்த வரலாறு வண்ணப்படங்களுடன் வசனத்துடன் எழுதப்பட்டுள்ளது.

அரசன் விக்கிரமாதித்தனுக்கு அருள்புரிந்த அன்னை உஜ்ஜையினி மாகாளி அம்மன் :

சான்றோர்(நாடார்) குல அரசன் விக்கிரமாதித்தனுக்கு அன்னை உஜ்ஜையினி மாகாளி அம்மன் அருள் புரிந்த வரலாற்றை இங்கே பார்ப்போம்!.

மன்னன் விக்கிரமாதித்தனின் நல்லாட்சியில் குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்கு திருப்தியில்லை. கன்னிகாபுரம் என்கிற சிறிய ராஜ்ஜியத்துக்குள் கிணற்று தவளைபோல் வாழும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. தனது பிரம்மாண்டமான கனவுகளை சாத்தியப்படுத்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

இதனையடுத்து தனது தம்பி பட்டியை அழைத்த விக்கிரமாதித்தன், பட்டி...'நமது தலைநகரம் இன்னும் விஸ்தாரமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆறும், மலையும், வனமும் சூழ்ந்த வளமான பகுதியாக இருக்க வேண்டும். அப்படியொரு இடத்தை நீ போய் தேர்ந்தெடுத்து வா' என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அதன்படி பட்டி, நாலா திசைகளுக்கும் சென்றான். ஒரு நாள் விஷாலி மலையடிவாரத்தில் சிப்ரா நதியை ஒட்டி ஒரு பெரும் வனப்பகுதியை கண்டான். அந்த அடர்ந்த வனத்தில் பெரும் மலையடிவாரத்தின் கீழ் அம்மன் கோவில் அழகுற அமைந்திருந்தது. கருவறையில் பத்ரகாளியம்மன் கொலுவிருந்தார்.

அங்குள்ள ஒரு ஆலமரத்தின் மீது உள்ள கிளைகளில் வட்ட வடிவமாக ஏழு உரிகள் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தன. அந்த உரிகள் மிகச் சரியாக தாமரைக் குளத்துக்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்தன. அதன் நேர் கீழே தாமரைக்குளத்தின் நடுவில் மிகக் கூர்மையான வேல் ஒன்று நடப்பட்டிருந்தது. கோவில் கருவறைக்கு சென்ற பட்டி, அம்மனை வழிபட்டு கோவிலை சுற்றி வந்தான். அப்படி வந்தபோது ஒரு பெரிய பாறையொன்றில் வீரனோ, சூரனோ, புத்திமானோ. பலவானோ... யாராயிருந்தாலும், எந்த குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, எந்த தைரியசாலி இந்த தாமரை குளத்தில் குளித்து அம்மனை தொழுது, ஆலமரத்தின் மேலே இருக்கும் ஏழு உரிகளையும் ஒரே வீச்சில் துண்டித்து, அந்த உரிகள் கீழே விழும் முன்பாகவே குளத்தின் நடுவில் இருக்கும் கூரிய வேலின் மீது தனது உடலை பாய்ச்சுகிறானோ அத்தகைய அபூர்வனுக்கு தேவி காளியம்மனே காட்சியளிப்பார்.

அப்படி தரிசனம் கண்டவன் பெரும் சக்கரவர்த்தியாக ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களையும் வென்று தேவியின் இந்தப் பூவுலகை அரசாளுவான். இது உறுதி என்று செதுக்கப்பட்டு இருந்தது. அதை படித்த பட்டி உடனடியாக கன்னிகாபுரம் திரும்பி விக்கிரமாதித்தனிடம் சகலத்தையும் தெரிவித்தான். கூடவே பத்ரகாளியம்மன் வீற்றிருக்கும் அந்தப் பிரதேசமே புதிய தலைநகரம் அமைக்க சிறந்த இடமென்றும் கூறினான். உடனே விக்கிரமாதித்தன் பட்டியுடன் அந்த இடத்துக்குப் புறப்பட்டு வந்தான்.

தாமரை குளத்தில் மூழ்கி குளித்து காளியம்மனை மனதார தொழுதான். பின்னர் தனது வாளுடன் மரத்தின் மீது ஏறியவன் பாறையில் செதுக்கியிருந்தபடி செய்தான். அப்போது பத்ரகாளியம்மன் அங்கே தோன்றி விக்கிரமாதித்தனை தாங்கி பிடித்து காப்பாற்றினாள். தேவியின் தரிசனம் கண்ட பட்டியும், விக்கிரமாதித்தனும் பரவசம் அடைந்தனர். அவர்களது உன்னத பக்தியினால் மனம் மகிழ்ந்த காளியம்மன் அவர்களை வாழ்த்தி விக்கிரமா... உனது பணிவும், பக்தியும், வீரமும் என்னை மகிழ செய்து விட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றார்.

தாயே! பராசக்தி! நீங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த திருக்கோவிலின் பிரதேசத்திலேயே எனது தலைநகரை அமைத்துக் கொண்டு ராஜ்ஜியம் ஆள ஆசைப்படுகிறேன். வரமளிக்க வேண்டும் தாயே! என்று வேண்டினான். அப்படியே ஆகட்டும் என்று வரமளித்த பத்ரகாளியம்மன், நீண்ட நெடிய காலம் தர்மபரிபாலனம் செய்வாயாக என்று வாழ்த்தி மறைந்தார். விக்கிரமாதித்தன் அந்த நகருக்கு உஜ்ஜையினி மாகாளிப்பட்டணம் என்று பெயர் சூட்டி, தனது குடிமக்களை அங்கே வரவழைத்து குடியமர்த்தி அங்கிருந்தே தனது ராஜ்ஜியத்தை ஆளத் தொடங்கினான்.

இப்படி அளப்பரிய சக்தி தரும் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவிலின் அசல் வரலாறு புத்தகத்திற்கு பூஜை செய்து அதில் இருந்த அம்மன் உருவத்தை சிலையாக வடிவமைத்து தஞ்சையில் வைத்து வழிபடுகின்றனர்.

Tags:    

Similar News