தீராத நோய் தீர்க்கும் உப்புச்சந்தை மாாியம்மன் கோவில்
- இந்த கோவிலில் வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
- இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற கோவில்கள் வரிசையில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக செம்பனார்கோவில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் உள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் செம்பனார்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் உப்புச்சந்தை என்ற கீழையூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் ஊரின் பெயரை கொண்டு உப்புச்சந்தை மாாியம்மன் என அழைக்கப்படுகிறார். மழையின்றி உலகம் இல்லை. மாரி இல்லாது காரியம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஊர்தோறும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் மேலப்பாதி கிராமத்துக்கும், கீழையூர் கிராமத்துக்கும் இடையே இக்கோவில் உள்ளது.
தற்போது கோவில் உள்ள இந்த பகுதி முற்காலத்தில் மிகப்பெரிய காடாக இருந்தது. இங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் பூம்புகார் கடற்கரை உள்ளது. பூம்புகார் பகுதியில் உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்புகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்து இந்த இடத்தில் குவித்து ஏலம் விடுவது வழக்கம். உப்பு ஏலம் தொடா்ந்து இந்த பகுதியில் நடந்ததால் இந்த ஊர் உப்புச்சந்தை என்று அழைக்கப்படுகிறது.
தலவரலாறு
பழங்காலத்தில் மன்னர்கள் பூம்புகார் கடற்கரைக்கு சென்று தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்வது வழக்கம். இவ்வாறு மன்னர்கள் செல்லும்போது சேவர்களும் உடன் செல்வர். இந்த ்நிலையில் தஞ்சை மன்னரிடம் பணிபுரிந்த ஒருவர் தனது குடும்பத்துடன் பூம்புகார் சென்று விட்டு திரும்பி வரும்போது, கீழையூர் என்ற பகுதியில் அவரது பெண் குழந்தை இறந்து விட்டது.
உடனே அந்த இடத்தில் இறந்த சிறுமியை அடக்கம் செய்துவிட்டு திரும்பி விட்டனர். சிறுமி அடக்கம் செய்த இடத்தில் அதாவது தற்போது மாரியம்மன் கோவில் முன்பு உள்ள இடத்தில் அப்பகுதி சிறுமிகள் தினமும் விளையாடுவது வழக்கம்.
கூழ் கேட்ட சிறுமி
அந்த சிறுமிகளுடன் புதிதாக ஒரு சிறுமி தினமும் விளையாடி விட்டு மாலை நேரத்தில் மறைந்து விடுவாள் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வை பற்றி அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகள் ஊருக்குள் சென்று கூறினர். இந்நிலையில் ஒரு நாள், உப்புச்சந்தைக்கு அருகில் உள்ள திருச்சம்பள்ளி கிராமத்துக்கு அந்த சிறுமி வீடு, வீடாக சென்று பால் கேட்டாள். அவளுக்கு யாரும் பால் கொடுக்க மறுத்து விட்டனர்.
ஒரு வீட்டிற்கு சென்று சிறுமி கூழ் கேட்டிருக்கிறார். உடனே அந்த வீட்டுப் பெண் சிறுமிக்கு கூழ் கொண்டு வந்து கொடுத்து உள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளாள்.
தரையில் கொட்டிய பால்
கூழையும், தண்ணீரையும் குடித்து அந்த சிறுமி அந்த பெண்ணை பார்த்து படுக்க இடம் கொடு என்று கேட்க, வீட்டிற்கு பின்புறம் சென்று படுத்துக்கொள் என்று கூறுகிறார். அந்த சிறுமியும் கொல்லைப்புறத்துக்கு சென்று படுத்துக் கொள்கிறாள். அந்த நேரத்தில் சிறுமிக்கு பால் தர மறுத்த வீடுகளில் பானை உடைந்து பால் தரையில் கொட்டுகிறது.
அனைவரும் பயந்துபோய், சிறுமிக்கு கூழ் கொடுத்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுமியை காணவில்லை. அதற்கு மாறாக சிறுமி படுத்திருந்த இடம் புற்றாக மாறியதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்தது அம்மன் என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் தவறை மன்னிக்குமாறு அம்மனிடம் வேண்டினர்.
ராஜகோபுரம்
இதற்கிடையில் திருச்சம்பள்ளியில் ஒரு செல்வந்தரிடம் எனக்கு இருக்க ஒரு கொட்டகை கட்டித்தர வேண்டும் என அசரீரியாக சிறுமி வடிவில் இருந்த அம்மன் கேட்க அதன்படியே திருச்சம்பள்ளியில் கொட்டகை கட்டி தரப்பட்டது.
முதலில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் சுரங்கத்திற்குள் இருந்தது. நாளடைவில் சிறிய கொட்டகை அமைத்து, சுரங்கத்தில் இருந்து வெளியே அம்மனை கொண்டு வந்தனர். பின்னர் திருப்பணிகள் நடந்து தற்போது 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக மாரியம்மன் கோவில் காட்சி அளிக்கிறது.
முக்கிய விழாக்கள்
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று பால்குடம், காவடி விழா, ஆடி மற்றும் தை மாதத்தில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை, வைகாசி மாதம் 9 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருந்திருவிழா ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. மாணவ, மாணவிகள், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வு நாளில் உப்புச் சந்தை மாரியம்மன் மற்றும்(சீதளாபரமேஸ்வரி) சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வழிபட்ட பிறகே தேர்வு எழுத செல்வர். மேலும் நோய் தீர்க்கும் தலமாக உள்ள இந்த கோவிலில் தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நோய்கள் நீங்க வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
நடை திறப்பு
கோவிலில் நுழைந்த உடன் இடது புறத்தில் விநாயகர், வலது புறத்தில் முருகன் காட்சி அளிக்கிறார்கள். கோவிலுக்குள் பேச்சியம்மன், மதுரை வீரன், கோவிலின் பின் பக்கம் சரஸ்வதி ஆகிய சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இந்த கோவிலில் தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும். இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.
பகல் நேரத்தில் நடை திறந்து இருப்பது வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் எந்த நேரத்திலும் சாமி தரிசனம் செய்யலாம் என்பதால் பகல் நேரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறை வந்து அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில் 12 கி.மீ்ட்டர் பயணித்து கீழையூருக்கு சென்று உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலை அடையலாம்.
நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலுக்கு வர விரும்புபவர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.