ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2016-06-17 05:22 GMT   |   Update On 2016-06-17 05:22 GMT
திருப்பரங்குன்றம் கல்யாண விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் பாண்டியன்நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி புத்திகளுடன் கூடிய கல்யாணவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல லட்சம் செலவில் புதியதாக கோபுரம் கட்டப்பட்டது.

மேலும் புதிதாக விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் இந்த விக்ரகங்களுக்கு என்று தனித்தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களிலேயே இங்கு மட்டும் தான் சித்தி புத்திகளுடன் கல்யாணவிநாயகர் காட்சியளிக்கிறார்.

இந்த கோவிலில் நேற்று காலையில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதற்காக கோவில் முன்பு 9 வேதிகை, 9 யாகசாலை அமைத்து 240 கும்பங்களில் கங்கை, தாமிரபரணி, அழகர்கோவில் நூபுரகங்கை தீர்த்தம் நிரப்பப்பட்டு 3 நாட்கள் யாகச சாலை பூஜை நடைபெற்றது.

இதனையடுத்து நேற்று காலை 9.30 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பூஜை செய்யப்பட்ட யாக சாலையிலிருந்து குடம் புறப்பாடு நடந்தது. பின்னர் அங்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிகர் ராஜாபட்டர், கல்யாணவிநாயகர் கோவில் பட்டரான ருக்மணி கோபாலகிருஷ்ணவேதானி ஆகியோர் கோபுரத்தில் கும்ப பூஜை உள்ளிட்ட சர்வ பூஜை செய்தனர்.

பிறகு 10 மணியளவில் தங்கமுலாம் பூசப்பட்ட விநாயகர் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதேவேளையில் மற்ற கோபுரங்களுக்கும் 19 சன்னதியில் சம காலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் திருப்பணிக் குழு தலைவர் கண்ணன், கோவில் தலைவர் வள்ளிநாயகம், திருப்பணி குழு ஓருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், செயலாளர் லட்சுமணகுமார், பொருளாளர் லிங்கராஜ் மற்றும் பாண்டியன்நகர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை அன்னதானம் நடைபெற்றது.

சினிமா பட இயக்குனரும், பிரபல இசை அமைப்பாளருமான கங்கை அமரன் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

Similar News