ஆன்மிகம்
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ திருவிழா தொடங்கியது

Published On 2016-12-17 04:09 GMT   |   Update On 2016-12-17 04:09 GMT
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வருகிறார்கள். கேரள மாநிலத்தில் சபரிமலை தலத்தைப் போன்று குளத்துப்புழை ஐயப்பன் கோவில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில், அச்சன்கோவிலில் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் ஆகியவையும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வருகின்றன. சபரிமலைக்கு சென்றுவரும் பக்தர்களில் ஏராளமானவர்கள் இந்த கோவில்களுக்கும் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கிறார்கள்.

ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக எளிதில் செல்ல முடியும்.

இதில் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலானது செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மகோற்சவ திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான மகோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அபூர்வ ஆபரணங்கள் நேற்று முன்தினம் மாலையில் அணிவிக்கப்பட்டன.

நேற்று காலை 9.30 மணிக்கு கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் கொடியேற்றம் நடந்தது.

பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர நாயர், கோவில் ஆலோசனைக்குழு தலைவர் சத்யசீலன், செயலாளர் உன்னிகிருஷ்ணன், துணை தலைவர் கோபி, ராமச்சந்திரன் மற்றும் தமிழக-கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவிழா வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. 24-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. நாளை முதல் 24-ந் தேதி வரை கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News