ஆன்மிகம்
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் யாக பூஜை நடந்த போது எடுத்த படம்.

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா யாகத்துடன் தொடங்கியது

Published On 2017-08-28 03:58 GMT   |   Update On 2017-08-28 03:58 GMT
திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர் அருகே உள்ளது பட்டமங்கலம். இங்கு பிரசித்தி பெற்ற குரு வழிப்பாட்டு தலமான தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இங்கு தட்சிணாமூர்த்தி மீனாட்சி சுந்தரேசுவருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் குருபகவான் கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மற்றொரு தனிச்சிறப்பாகும்.

இங்கு வருகிற செப்டம்பர் மாதம் 2-ந்தேதி குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்று குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயருகிறார். இதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு பட்டமங்கலத்தில் கோவில் முன்பு கணபதி ஹோமம், சிறப்பு யாகத்துடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்கியது. சீனிவாச பட்டாச்சாரியார் தலைமையில் யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் பூர்ணாகுதி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக சிவதொண்டு அடிப்படையில் சிவமணிகண்டன் தலைமையில் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் யாகத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீரப்ப செட்டியார் செய்துள்ளனர்.

Similar News