ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தேரோட்டம்

Published On 2018-05-28 05:42 GMT   |   Update On 2018-05-28 05:42 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் காலையில் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசிவிஸ்வநாதர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மீது பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு இன்னிசை நிகழ்ச்சி, அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தொழில் அதிபர் எம்.கோபி ஒரு ஜோடி வெள்ளி கொலுசை திருவிழாவை காணவந்த ஒரு சிறுமிக்கு தானமாக வழங்கினார். அதன்பின்பு பூப்பந்தல் வாகனத்தில், வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

9-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியாக எடுத்து வரப்பட்டார். அம்மன் பல்லக்கின் முன் நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட யானை மீது புனித நீர் கொண்டு செல்லப்பட்டது. தேர் நிறுத்தப்பட்டிருந்த கீழரத வீதிக்கு இந்த பவனி சென்றடைந்ததும், அம்மன் தேரில் எழுந்தருளினார். தேரில் வைத்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. யானை மீது கொண்டுவரப்பட்ட புனித நீர் மூலமும் அபிஷேகம் நடந்தது.



காலை 8.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்பு மணி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேர், தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக மதியம் 12.30 மணிக்கு கீழ ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.

10-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை மண்டகப்படி, சமய உரை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது. 
Tags:    

Similar News