ஆன்மிகம்
பழனியில் பக்தர்கள் வெள்ளத்தில் ரதவீதியில் தேர் உலா வந்த காட்சி.(உள்படம்: முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை)

பழனியில் வைகாசி விசாக தேரோட்டம்

Published On 2018-05-29 05:43 GMT   |   Update On 2018-05-29 05:43 GMT
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது.

10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு மேல் திருத்தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.


கோவில் யானை கஸ்தூரி, தேரை முட்டி தள்ளிய காட்சி.

இதைத்தொடர்ந்து பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக சென்ற தேர் பின்னர் நிலை வந்து சேர்ந்தது.

முன்னதாக மேடான பகுதிகளை கடக்க முடியாமல் தேர் நிற்கும் போது கோவில் யானை கஸ்தூரி தேரை முட்டித்தள்ளி நகர்த்தியது. தேர் நிலையை அடைந்ததும் சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 9-ம் நாளான நாளை (புதன்கிழமை) இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 10-ம் நாள் இரவு சப்பரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News