ஆன்மிகம்
குருபெயர்ச்சியையொட்டி நேற்று உத்தமர்கோவிலில் யாகம் நடந்தபோது எடுத்த படம்.

இன்று குருப்பெயர்ச்சி: உத்தமர் கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள்

Published On 2018-10-04 03:45 GMT   |   Update On 2018-10-04 03:45 GMT
குரு பார்க்க கோடி நன்மை... என்பது ஆன்மிக சொற்களாகும். இன்று குரு பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, உத்தமர் கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றன.
குரு பார்க்க கோடி நன்மை... என்பது ஆன்மிக சொற்களாகும். இத்தகைய சிறப்புக்குரிய குருபகவான் இன்று இரவு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். இதில் குரு பார்வையால் கடகம், ரிஷபம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் நன்மை அடைவார்கள் என்றும் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகார பூஜைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐதீகமாக நம்பப்படுகிறது.

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குருபெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதர் சாமி கோவிலிலும் குரு பெயர்ச்சியையொட்டி தெட்சிணா மூர்த்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது.

உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு குரு பெயர்ச்சியையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு யாகம் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு தெட்சிணாமூர்த்தி சன்னதியில் மகா தீபாராதனை நடக்கிறது.

இதேபோல் நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் குருபரிகார தலமாக விளங்கும் உத்தமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் கோவில் வெளி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பூ பந்தலில் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக எழுந்தருளினர். பிரம்மா சன்னதியில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கும்ப பூஜை, பிரம்மா மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்தி சன்னதியில் புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் பூஜை, பஞ்சாசன பஞ்சவர்ண வேதிகா அர்ச்சனை நடைபெற்று, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நெல், பொரி, நாட்டுசர்க்கரை, கல்கண்டு, பேரிச்சம்பழம், திராட்சை, முந்திரி, தேன், நெய் உள்ளிட்ட அஷ்ட திரவியங்கள், கோதுமை, நெல், துவரை, பச்சைபயிறு, எள்ளு உள்ளிட்ட நவதானியங்கள் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, மாசிக்கா, மாசிபச்சை உள்ளிட்ட 96 வகையான மூலிகை பொருட்களை கொண்டு குரு பிரீதி, நவக் கிரக, வஸ்வதாரா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

இதனைதொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார ராசிக்காரர்கள் தங்கள் ராசிகளுக்கு பரிகாரம் செய்து தெய்வங்களை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி உத்தரவின்பேரில் கோவில் செயல் அலுவலர் பெ.ஜெய்கிஷன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 10.05 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News