ஆன்மிகம்
குருவித்துறை கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.

குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி வழிபாடு

Published On 2018-10-05 04:02 GMT   |   Update On 2018-10-05 04:02 GMT
சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகையாற்று கரையில் குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் வளாகத்தில் நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான் ளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான குருப் பெயர்ச்சி விழா கடந்த 2-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு ரெங்கநாத பட்டர், ஸ்ரீதர் பட்டர், சடகோப பட்டர் உள்பட உப அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க பரிகார யாகபூஜையை நடத்தினர். மேலும் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

குருவித்துறை கோவிலில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

இதனைத்தொடர்ந்து இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து வந்த குருபகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மன்னாடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயதேவி, நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி வரதராஜ பண்டித் தலைமையில் குருபகவானுக்கு பரிகார யாகபூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபரும், பா.ஜ.க. நிர்வாகியுமான மணி முத்தையா, எம்.வி.எம். கலைவாணி பள்ளி தாளாளர் மருதுபாண்டி, நிர்வாகி வள்ளிமயில், கோவில் தக்கார் சுசிலாராணி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News