ஆன்மிகம்

பித்ருக்களின் பிரம்மோற்சவம்

Published On 2018-10-08 03:33 GMT   |   Update On 2018-10-08 03:33 GMT
இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள்.
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களில், “ ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.

பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மஹாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மஹாளய பட்சம், ‘பித்ருக்களின் பிரம்மோற்சவம்‘ என்று சிறப்பிக்கப்படுகிறது.

இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

இந்த பதினைந்து நாட்களும், பித்ரு லோகத்தில் வாசம் செய்யும் முன்னோர்கள், பூமிக்கு வருகை தருகிறார்கள். வாழ்வு முடிந்த பின், 9 நாட்கள், பிரேத சரீரத்துடன் இருக்கும் ஆத்மா, 10-ம் நாள் செய்யப்படும் விசேஷ கர்மாக்களைத் தொடர்ந்து, 12ம் நாள் பிரேத சரீரம் நீங்கப்பெற்று, சூட்சும சரீரத்துடன் பித்ரு லோகத்தை அடைகிறது.

அங்கிருந்து யமப்பட்டணமாகிய ‘ஸம்யமனீபுரி’யை ஒரு வருட முடிவில் அடைகிறது. அங்கு, அந்த ஆத்மாவின் கர்மாக்களுக்கு ஏற்ப சொர்க்க வாசமோ, நரக வாசமோ கிடைக்கிறது. அதன் பின், மீண்டும் அடுத்த பிறவி எடுக்கவோ, அல்லது தகுந்த காலம் வரும் வரை பித்ரு லோகத்தில் வாசம் செய்யவோ நேரும்.

நம் முன்னோர்களில், யார் முக்தி அடைந்திருக்கிறார், யார் மறு பிறவி எடுத்திருக்கிறார், யார் பித்ருலோகத்தில் இன்னமும் வாசம் செய்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். ஆகவே, கண்டிப்பாக, பித்ருகர்மாக்களை, முக்கியமாக, மஹாளய சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும்.

ஆனால், மஹாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட பிரச்னைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம். இது மகாளய அமாவாசை வழிபாட்டின் தனிசிறப்பு.

இந்த மஹாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா,பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம். மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது.

அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல ப்ரச்னைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் பிரச்சினைகள் தொடரும்.

இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். என்றாலும் இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.

Tags:    

Similar News