ஆன்மிகம்
பழனி பாதவிநாயகர் கோவில் அருகே குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2018-12-03 03:05 GMT   |   Update On 2018-12-03 03:05 GMT
முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வார்கள்.

திருவிழா காலங்கள் என்றில்லாமல் விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினங்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் விடுமுறை மற்றும் முகூர்த்த தினமான நேற்று பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அதிகாலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது.

முகூர்த்த தினம் என்பதால் திருஆவினன்குடி கோவிலில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. இதனால் அடிவாரம் பகுதி முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. அதே போல் பாதவிநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சாமி தரிசனம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் தங்கள் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தினர். இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் பக்தர்கள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
Tags:    

Similar News