ஆன்மிகம்
மண்குதிரையுடன் ஊர்வலமாக சென்ற பக்தர்கள்.

மண்குதிரை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2019-04-06 03:11 GMT   |   Update On 2019-04-06 03:11 GMT
அவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேற்று ஏராளமான பக்தர்கள் மண்குதிரை சுமந்து நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.
அவினாசியில் புகழ்பெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்தையொட்டி எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க அவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இது கடந்த 50 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக ராயன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவினாசி பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மதியம் அவினாசி அருகே உள்ள கருணைப்பாளையத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அங்கு தயார் செய்யப்பட்ட மண்குதிரைக்கு எலுமிச்சை பழ மாலை, மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மண்குதிரையை சுமந்த பக்தர்கள் அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ராயன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். அப்போது வழியில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மங்கலம் ரோடு-பைபாஸ் சாலை சந்திப்பில் பட்டாசு வெடித்த போது சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பையில் தீ கனல் பட்டு தீப்பிடித்தது. உடனே ஊர்வலத்தில் சென்றவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

அவினாசி ராயன் கோவிலுக்கு மண்குதிரையுடன் வந்த பக்தர்கள் அங்கு அதை இறக்கி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறும் போது, ராயன் அவினாசி மக்களின் காவல் தெய்வம் ஆவார். அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் ராயன் காவல் காக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக மண்குதிரை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் மண்குதிரை சுமந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவிளாசி திருவிழா நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு ராயன் காவல் காப்பார் என்பது ஐதீகம் என்றனர்.
Tags:    

Similar News