ஆன்மிகம்

பிடாரி அரசியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-04-30 06:53 GMT   |   Update On 2019-04-30 06:53 GMT
இருப்பு கிராமத்தில் பிடாரி அரசியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் இரவு அம்மன் வீதிஉலாவும் நடந்தது. விழாவில் கடந்த 27-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் செடல் உற்சவமும், தேரோட்டமும் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் செடல் குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

பின்னர் மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதே போல் மற்றொரு தேரில் விநாயகர் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு விநாயகரை தேரை ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து அரசியம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

விழாவில் நேற்று அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா அறிவின் சிகரம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News