ஆன்மிகம்
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

Published On 2019-05-18 06:32 GMT   |   Update On 2019-05-18 06:32 GMT
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூரில் பிரசித்தி பெற்ற நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. சிறிய மலைமீது அமைந்துள்ள இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலையில் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதி உலா வந்தனர்.

கடந்த 10-ந்தேதி மாலை சேஷ வாகனம், அன்னவாகனத்திலும், 11-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 12-ந்தேதி மாலை கைலாச வாகனம், அன்னவாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. 13-ந்தேதி இடப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி காலை நறுங்குழல்நாயகி-எறும்பீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று மாலையில் யானைவாகனம், பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுடன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலைகோவில் வ.உ.சி. தெரு, ராஜவீதி, கள்ளர் தெரு வழியாக வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தையொட்டி வழிபாட்டு மன்றத்தினரால் தேவார இன்னிசை பாராயணம் நடைபெற்றது. அத்துடன் இளைஞர் அணி மற்றும் பொதுமக்கள் சார்பாக அன்னதானமும் நடைபெற்றது.

மேலும் தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வருகிற 20-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோ.ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ஹேமாவதி மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர். 
Tags:    

Similar News