ஆன்மிகம்
கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து எடுத்து செல்லப்பட்ட கம்பம் அமராவதி ஆற்றில் விடப்பட்டபோது எடுத்த படம்.

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலம்

Published On 2019-05-30 04:46 GMT   |   Update On 2019-05-30 04:46 GMT
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் முன்பு மூன்று கிளையுடைய வேப்பமர கம்பத்தினை நட்டு வைத்து புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்துவதும், பின்னர் அந்த கம்பத்தினை ஆற்றுக்கு கொண்டு போய் விடுவதும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் கரூருக்கு வருகை தருவதால் கம்பம் விடும் நாளில் கரூர் களை கட்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து கம்பத்தை தேடி சென்றனர். பின்னர் மூன்று கிளையுடைய வேப்பமர கம்பினை எடுத்து கொண்டு பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலின் பலிபீடம் எதிரே நட்டு வைத்தனர். பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து வேப்பிலையை சூட்டி அலங்கரித்து தினமும் பக்தர்கள் புனித நீரை எடுத்து வந்து குடம் குடமாக ஊற்றி வழிபட்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மாலை 4 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவில் பலிபீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைதொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பிடுங்கி பூசாரி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேளதாள வாத்தியங்கள் முழங்கின. கோழிகள் பறக்க விடப்பட்டன. இதைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்தினுள் கம்பம் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மல்லிகைபூவினை அதன் மீது தூவினர். பின்னர் அரிவாளை பிடித்து கொண்டு காவல் தெய்வம் மாவடி ராமசாமி முன்னே செல்ல அதனை தொடர்ந்து கம்பம் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்தது.

மாலை 6.50 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. அப்போது ஓம் சக்தி தாயே... பராசக்தி தாயே... என கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர். இதற்கிடையே அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7.05 மணியளவில் அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 
Tags:    

Similar News