ஆன்மிகம்
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-05-31 05:01 GMT   |   Update On 2019-05-31 05:01 GMT
கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் உள்ள மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 23-ந் தேதி காலை மாரியம்மன் திருவீதி உலாவும், இரவு பக்தர்கள் மாரியம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள். 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை காலை இரவு நேரங்களில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை மாரியம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து இரவு 7-மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நேற்று காலை காலை 5 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு முதல் நாள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள் ஆகியோர் தலைமையில், புரவிபாளையம் ஜமீன் சண்முக சுந்தரிவெற்றிவேல், கோபண்ணமன்றாடியார் குடும்பத்தினர் ஆகியோர் முன்னிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தில் பக்தர்கள் ஒம்சக்தி பராசக்தி என்ற கோ‌‌ஷம் முழங்கினர். விநாயகர் தேர் முன்பு செல்ல பின்னால் 30 அடி உயரம் தேரில் சூலக்கல்மாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் தேர் மீது வாழைப்பழம் வீசி மாரியம்மனை வழிபட்டனர்.

முதல் நாள் தேர் இரவு கிழக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் முன்னால் அமைச்சர் செ.தாமோதரன், கு.சண்முகசுந்தரம் எம்.பி. மற்றும் இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் நாள் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு மேற்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) 3-ம் நாள் மாலை 4.30 மணிக்கு தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. இரவு கோவில் முன்பு தேர்நிலையில் நிறுத்தப்படுகிறது.

2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேக பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் தக்கார் ஆனந்த், செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News