வழிபாடு

சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை... கரைப்பதற்கு இனி கடலுக்கு செல்ல வேண்டியதில்லை

Published On 2024-09-05 02:24 GMT   |   Update On 2024-09-05 02:24 GMT
  • விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
  • விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும்.

விநாயகர் சதுர்த்தி நாளை மறுதினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கொழுக்கட்டை மாவு உள்ளிட்டவற்றை வாங்குவதுடன் களிமண்ணால் செய்த விநாயகர் சிலை, பூ போன்ற பொருட்களை வாங்கி வந்து பூஜை செய்வது வழக்கம்.

பூஜை முடிந்ததும் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கொண்டு கரைப்பதும் உண்டு. ஆனால் தற்போது சற்று வித்தியாசமான முறையில் பசும் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை விற்பனைக்கு வந்து உள்ளது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பசும் சாணத்தால் விநாயகர் சிலை செய்து வரும் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் பிரிதா மணிகண்டன் கூறியதாவது:-

நாட்டு மாடுகளை காப்பதற்காக ஆதம்பாக்கம், பள்ளிக்கரணையில் 120 மாடுகளுடன் கோசாலை ஒன்றை நடத்தி வருகிறோம். இதில் சிவகங்கை குட்டை, தஞ்சாவூர் குட்டை, காஞ்சி குட்டை, துரிஞ்சல் உள்ளிட்ட 20 வகையான நாட்டு மாடுகள் எங்களிடம் வாழ்ந்து வருகின்றன.

இவற்றின் மூலம் எதிர்பார்த்த அளவு பால் உற்பத்தி இல்லாததால் விவசாயிகளிடம் நாட்டு மாடுகளுக்கு நல்ல வரவேற்பு இல்லாத நிலை உள்ளது.

இதனால் இந்த வகை மாடுகள் அழிந்துவிடும் நிலை இருப்பதால் இதுகுறித்து பலருக்கும் விழிப்புணர்வு அளிப்பதுடன், இவற்றை பாதுகாத்தும் வருகிறோம்.

பசுக்களில் இருந்து பால் மட்டுமே வருமானம் என்று பார்க்காமல், சாணத்தில் இருந்து பொருட்களை தயாரித்து வருமானம் பார்க்க முடியும்.

குறிப்பாக இயற்கை உரம், கம்யூட்டர் சாம்பிராணி, சோப்பு போன்ற பூஜை பொருட்கள், பாத்திரம் பூசும் பொடி, கொசுவிரட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், சோப்பு, முகத்தில் தடவும் கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், கண், மூக்குகளில் விடப்படும் நெய் உள்ளிட்ட பஞ்ச கவ்ய மருந்துகள் போன்றவை சாணம் மூலம் தயாரித்து வருகிறோம்.

தற்போது விநாயகர் சதுர்த்தி சீசன் என்பதால் பசு மாட்டு சாணத்தால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எந்தவித ரசாயன பொருட்களும் சேர்க்காமல் சுத்த சாணத்தால் பின்விளைவு இல்லாத வகையில் தயாரித்து வருகிறோம்.

சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள் களிமண் பிள்ளையார் வைத்து பூஜித்து விட்டு நீரில் கரைப்பதற்கு நீர் நிலைகளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும். இதுபோன்ற பல சிறப்புகளை கொண்டது சாணப்பிள்ளையார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பசும் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சிறியது (5 செ.மீ) ரூ.90, சற்று பெரியது (12 செ.மீ) ரூ.220, அதைவிட சற்று பெரியது (17 செ.மீ) ரூ.350, பெரியது (27செ.மீ) ரூ.450 என 4 வகையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் ரசாயன பொருட்கள் கலக்காத சுத்தமான முறையில் இயற்கையிலேயே தயாரிக்கப்பட்ட மங்களகரமான நிறம் சேர்ப்பதற்கு கூடுதலாக ரூ.10 அதிகம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இந்த வகை விநாயகர் சிலைகள் ஆதம்பாக்கம் மற்றும் நங்கநல்லூரில் விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்று விற்பனையாளர்கள் கூறினர்.

Tags:    

Similar News