வழிபாடு

தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது

Published On 2023-04-19 05:49 GMT   |   Update On 2023-04-19 05:49 GMT
  • 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.
  • சித்திரை அமாவாசை அன்று மூலை அனுமாரை மேஷ ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது ஐதீகம்.

தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோவில்கள் ஒன்றாக திகழ்கிறது. இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அன்று அனுமாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று(புதன்கிழமை) சித்திரை அமாவாசையை முன்னிட்டு லட்ச ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்கு வெற்றி தரும் வெற்றிலைகளான சிறப்பு அலங்காரமும் அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது. சித்திரை அமாவாசை அன்று மூலை அனுமாரை மேஷ ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது ஐதீகம்.

பக்தர்கள் தங்களது கையால் வெற்றிலை, சீவல், பாக்கு சேர்த்து வெற்றிலை மாலை கட்டி மூலை அனுமாருக்கு சாற்றி வழிபட்டால் கிரக தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் தாங்கள் அனுமனுக்கு சாற்றிய வெற்றிலை மாலையை திரும்ப பெற்று அத்துடன் வாழைப்பழங்களை சேர்த்து பசுமாட்டிற்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News