வழிபாடு

பழனி மலைக்கோவில் வெளிபிரகாரத்தில் வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

Published On 2023-03-13 08:33 GMT   |   Update On 2023-03-13 08:33 GMT
  • வெயில் சுட்டெரித்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.
  • பக்தர்களின் வரிசை வெளிப்பிரகாரம் வரை இருந்தது.

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட பிரதான பாதைகள் வழியாக சென்று ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகியவற்றின் மூலமும் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்குள்ள நிலையங்களில் கவுண்ட்டரை கடந்தும் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேபோல் கோவிலின் தரிசன வழிகளிலும் கூட்டம் அதிகம் இருந்ததால் பக்தர்களின் வரிசை வெளிப்பிரகாரம் வரை இருந்தது. இதனால் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே பழனியில் நேற்று கடும் வெயில் சுட்டெரித்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். இருப்பினும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

பழனியில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவரவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. கிழக்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்தால் அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று பகல் முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ரோப்கார் இயக்கப்பட்டது. இதனால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Tags:    

Similar News