சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணங்கள் நடத்த அனுமதி: பக்தர்கள் வரவேற்பு
- அறநிலையத்துறை இதற்கான அனுமதி அளித்துள்ளது.
- ஆகஸ்டு 18-ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில், திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால், பக்தர்கள் தரப்பில் கோவில் வளாகத்தில் வைத்து, திருமணம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது, அறநிலையத்துறை இதற்கான அனுமதியை அளித்துள்ளது. இது தொடர்பாக கோவிலில், நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருக்கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பெறப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. எனவே கோவிலில் திருமணம் நடத்த விருப்பமுள்ளவர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, கோவிலில் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்கட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும் என்று கூறினர். இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.