வழிபாடு

பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்திய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் கோவில் கொடி மரம் அருகே திரண்டிருந்த பொள்ளாச்சி பக்தர்களால் பரபரப்பு

Published On 2023-03-15 06:30 GMT   |   Update On 2023-03-15 06:30 GMT
  • கோவிலில் பழமையாக இருந்த பல இடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • கம்பத்தடி ஆஞ்சநேயர் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தங்ககொடி மரம் பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் சிலர் திரண்டு வந்து அமர்ந்து இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவில் இணை ஆணையர் மாரிமுத்து அவர்களிடம் விவரங்களை கேட்டார்.

அப்போது, அவர்கள் கம்பத்தடி ஆஞ்சநேயரை, ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூட்டுபிரார்த்தனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவைப் பெற்ற கோவில் இணை ஆணையர், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

இதனால் நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த மகா கும்பாபிஷேகத்தை காரணம் காட்டி கோவிலில் பழமையாக இருந்த பல இடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கம்பத்தடி ஆஞ்சநேயர் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் தாயார் சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ராமானுஜர் காலத்தில் எப்படி இருந்ததோ அதேபோல் மீண்டும் மாற்றி அமைக்க கோரி தமிழக அரசுக்கும், அறநிலையத்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகிறோம்.

இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீரங்கம் கோவில் நிலைமை குறித்தும், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று (நேற்று) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில், கோவில் ஆரியப்படாள் வாசலுக்குள் உள்ள தங்க கொடிமரம் அருகே கூட்டு பிரார்த்தனை நடத்தினோம். இதையடுத்து எங்களை சந்தித்த கோவில் நிர்வாக அதிகாரி எங்களது கோரிக்கையை மேலிடத்துக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News