வழிபாடு

திருமலையில் தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது

Published On 2023-04-04 06:34 GMT   |   Update On 2023-04-04 06:34 GMT
  • 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
  • பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.

திருமலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலையில் தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது. தும்புரு தீர்த்தத்தின் மலையேற்றப் பாதையில் அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும், 6-ந்தேதி காலை 5 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையும் பக்தர்கள் தும்புரு தீர்த்தத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உடல் பருமன், இருதயக் கோளாறுகள், பிற நாள் பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவிதமான சமையல் பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என வானொலி மற்றும் ஒலிபரப்பு சாதனங்கள் மூலமாக தொடர்ந்து அறிவிக்கப்படும்.

பாபவிநாசனம் அணை பகுதியில் பக்தர்களுக்கு தேவஸ்தான அன்னப்பிரசாதத்துறையினர் உணவுப் பொட்டலங்களை வினியோகிப்பார்கள். மருத்துவப் பிரிவு சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பார்கள்.

பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுதவிர அன்னப்பிரசாதம், சுகாதாரம், பறக்கும்படை ஆகிய துறைகளில் போதுமான எண்ணிக்கையிலான ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். மலையேறும் பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட சில இடங்களில் பறக்கும் படையினர், வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News