வழிபாடு
null

இன்று சயன ஏகாதசி

Published On 2024-07-17 01:19 GMT   |   Update On 2024-07-17 01:21 GMT
  • ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி.
  • நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம்.

விரதங்களில் மிக மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வரும். இந்த ஏகாதசி விரதங்களில் சில ஏகாதசி விரதங்கள் மிகுந்த பலன்களை தரும் ஆற்றலை கொண்டது.

குறிப்பாக ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி. அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தனை ஏகாதசி மற்றும் மகாவிஷ்ணு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகளும் மிகவும் சிறப்பானவை.

ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரத நோன்பு இருக்கலாம்.

இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு படத்தை பூஜை அறையில் அலங்கரித்து வைத்து நைவேத்தியம் படைத்து தீபதூபங்கள் காட்டி வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவை அலங்கரிக்கும்போது தாமரை அல்லது மல்லிகைப்பூவை பயன்படுத்துவது நல்லது.

நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம். பூஜைகள் முடிந்ததும் மகாவிஷ்ணு போற்றி சொல்ல வேண்டும். இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்தால் ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்ததற்கு சமமான பலன்கள் கிடைக்கும்.

பிரம்மகத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகிச் செல்லும். மேலும் நல்ல வீடும், அமைதியான வாழ்க்கையையும் இந்த வழிபாடு பெற்று தரும். 

சயன ஏகாதசியான இன்று மேற்கொள்ளப்படும் விரதத்திற்கு கோபத்ம விரதம் என்று பெயர். காலை மற்ற கடமைகளை முடித்து விட்டு பூஜை அறையில் 3 கோலங்கள் போட்டு தாமரை மலர்களால் அலங்கரித்து அதன் நடுவில் மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு இருக்கும் படத்தை வைத்து வழிபட வேண்டும்.

33 முறை வலம் வந்து 33 முறை வழிபட வேண்டும். படம் இல்லாமல் கலசம் வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிறகு 33 நபர்களுக்கு பிரசாதம் அளிப்பது சாப்பிட செய்ய வேண்டும். இந்த பூஜை செய்பவர்களுக்கு பாவங்கள் விலகும். பேரன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News