முதுகுத்தண்டை வலுவாக்கும் அர்த்த நவாசனம்
- இந்த ஆசனம் செய்தால் வயிற்றில் தேவையற்ற சதை குறைகிறது.
- அதிக முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கலாம்.
'அர்த்த' என்றால் பாதி. 'நவ' என்றால் படகு. படகு போல, ஆனால், பாதி அளவுக்கு வளைந்திருப்பதால் இப்பெயர்.
செய்முறை
விரிப்பில் கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காருங்கள். உடம்புக்கு அருகிலேயே கை தரையில் ஊன்றி இருக்கட்டும். மெதுவாக, முட்டி மடங்காமல் இடது காலை சுமார் அரை அடிக்கு உயர்த்துங்கள். 1-5 எண்ணுங்கள். இடது காலை மெதுவாக கீழே இறக்கிவிட்டு, வலது காலை அதேபோல உயர்த்தி, 1-5 எண்ணுங்கள். மெதுவாக கீழே இறக்குங்கள். 2 முறை நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். இப்போது, இரு கால்களையும் முட்டி மடங்காமல் உயர்த்துங்கள். கைகள் நன்கு தரையில் பதிந்திருக்கட்டும். 1-5 எண்ணி, மெதுவாக கால்களை கீழே இறக்குங்கள். சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.
இனி, ஆசனத்துக்கு செல்வோம். கால் நீட்டி நிமிர்ந்து உட்காருங்கள். கால்கள் சேர்ந்திருக்கட்டும். முட்டி மடங்காமல் இரு கால்களையும் சற்று உயர்த்தவும். லேசாக பின்பக்கம் சாய்ந்து, இரு கைகளையும் உயர்த்தவும். கால் கட்டை விரல்கள் நம் கண்ணுக்கு நேராக இருக்கட்டும். கைகள், கால் விரல்களை நோக்கி இருக்கட்டும். 1-10 எண்ணவும். மெதுவாக கை, கால்களை கீழே இறக்கவும். நிதானமாக மூச்சை இழுத்து விடவும்.
இந்த ஆசனத்தால் முதுகுத் தண்டு வலுவடைகிறது. கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை இயக்கம் சீராகிறது. வயிற்றில் தேவையற்ற சதை குறைகிறது. அதிக முதுகு வலி உள்ளவர்கள் தவிர்க்கலாம்.