உடற்பயிற்சி

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களின் கவனத்திற்கு...

Published On 2022-10-22 05:16 GMT   |   Update On 2022-10-22 05:16 GMT
  • உடற்பயிற்சி செய்யும்போது, நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் நமக்குள் எழும்.
  • ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்பவர்களுக்கும் வழிகாட்டுகிறது, இந்த தொகுப்பு.

வீ ட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்பவர்களுக்கும் வழிகாட்டுகிறது, இந்த தொகுப்பு. உடற்பயிற்சி செய்யும்போது, நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் நமக்குள் எழும். அவை அனைத்திற்கும் தீர்வு காண தொடர்ந்து படியுங்கள்.

பொதுவான தவறுகள்

நிறைய பேர், உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை. உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை.

உடற்பயிற்சிக்கு முன்

உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன் நிச்சயம் சாப்பிட வேண்டும். அப்படி நீங்கள் சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த வகையில், 'வொர்க்-அவுட்' செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியலில் ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும்.

எப்போது சாப்பிடலாம்

உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.

உடற்பயிற்சிக்குப் பின்

உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பின்னரும் சாப்பிட வேண்டும். நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும்.

பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அவற்றுக்குப் பதிலாக தண்ணீர், இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

'வொர்க்-அவுட்' செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிக்கலாமா?

உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.

புதிதாக 'ஜிம்' செல்பவர்களுக்கு...!

முதன்முறையாக உடற்பயிற்சி செய்யும் சிலர், வார்ம்-அப் செய்யாமல் நேரடியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. வார்ம்-அப் செய்யாமல், பயிற்சியைத் தொடங்கவேண்டாம். புதிதாக ஜிம் போகும் சிலர், ஆர்வத்தில் அளவுக்கதிகமாக பயிற்சி செய்வதுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி நேரத்தையும், பயிற்சி முறைகளையும் அதிகப்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

Tags:    

Similar News