உடற்பயிற்சி

அன்றாடம் பின்பற்ற வேண்டிய எளிய பழக்கங்கள்

Published On 2024-07-28 02:54 GMT   |   Update On 2024-07-28 02:54 GMT
  • ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நலம் பயக்கும்.
  • உடல் எடையை பராமரிக்க உதவும்.

ஒவ்வொரு புது வருடம் தொடங்கும் போதும் ஒவ்வொருவரும் சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வார்கள். அதனை செயல்படுத்தவும் செய்வார்கள். சிலர் சில மாதங்களிலேயே அந்த உறுதிமொழிகளை பின்பற்றமுடியாமல் கைவிடவும் செய்வார்கள். அந்த உறுதிமொழிகளில் நிச்சயம் உடல் நலன் சார்ந்த விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.

நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உணவு முறையிலும், உடற்பயிற்சி விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியாக வேண்டும்.

வருடத்தின் பாதி மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அடுத்த புது ஆண்டை வரவேற்பதற்கு ஆயத்தமாவதற்கு முன்பாக அன்றாடம் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதும், அதனை ஆண்டு முழுவதும் பின் தொடர்வதும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நலம் பயக்கும்.

* ஒவ்வொரு நாளும் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்களை ஒதுக்கினாலே போதுமானது. எந்த வகையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்? அது கடினமானதாக இருக்குமா? எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? என்றெல்லாம் சிந்திக்க தேவையில்லை.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது விருப்பமான உடற்பயிற்சியை செய்து வரலாம். அதற்கும் முடியாத பட்சத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால் குறைந்தபட்சம் 10 நிமிடங்களையாவது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டும்.

* எந்த சமயத்தில் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி அதில் புரதமும், காய்கறிகளும் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அது எந்த வகையான புரதம், எந்த வகையான காய்கறிகள் என்பது முக்கியமல்ல. அவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

* தினமும் மாலையில் 10 நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்வதும் அவசியம். இதற்காக அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. தியானம் செய்ய இயலாதவர்கள் இந்த பயிற்சியை கையாளலாம். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது உட்கார்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு மெதுவாக மூச்சை உள் இழுத்துவிட்டு ஆழமாக சுவாசித்தால் போதும். இதனை செய்து வருவது மனதை தெளிவுபடுத்தும். அமைதியாகவும் வைத்திருக்க உதவும். நன்றாக தூங்குவதற்கும் வழிவகை செய்யும்.

* வழக்கமான உடற்பயிற்சியும் முக்கியமானது. விறுவிறுப்பான நடைப்பயிற்சி, 15 நிமிட யோகாசனம், தியானம், விரைவான உடற்பயிற்சி என எதுவாக இருந்தாலும், அதனை தினமும் மேற்கொண்டு வருவது உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். வழக்கமாக தொடரும் உடற்பயிற்சி மனநிலையையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை ஆதரித்து நோய்த்தொற்றுகளை தடுக்கும். உடல் எடையை பராமரிக்க உதவும்.

* வாழ்வின் எல்லா நாட்களும் இனிமையாக நகராது. ஏதாவதொரு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அத்தகைய நேரங்களில் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். நடந்த சம்பவத்தை பற்றியோ, இனி என்ன நடக்கும் என்றோ கவலையோ, பீதியோ அடைய வேண்டியதில்லை. அது மன வேதனையை அதிகப்படுத்தவே செய்யும்.

அந்த சூழலிலிருந்து வெளியே வர பயணம் மேற்கொள்ளலாம். அது நீங்கள் விரும்பும் சுற்றுலா இடமாகவும் இருக்கலாம். அங்கும் இதைப் பற்றி சிந்திக்காமல் நீங்கள் எப்படி மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குகிறீர்கள் என்பதை பொறுத்தே அந்த பயணம் இனிமையாக அமையும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் திரும்பி வருவீர்கள்.

Tags:    

Similar News