வெறும் கால்களில் மணலில், தரையில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- நடைப்பயிற்சி பல்வேறு பலன்களைத் தரும்.
- மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது.
இன்றைய மோசமான வாழ்வியல் சூழலில் நமது உடல் நலமானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் எடுத்து கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். இதற்கு அடுத்தாக நமது அன்றாட செயல்பாடுகளை சொல்லலாம். தினமும் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, மோசமான உணவு பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் தான் பெரிய பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு பலர் தேர்ந்தெடுக்கும் வழி தான் நடைப்பயிற்சி.
வேகமான நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. வயதானவர்களுக்கு வேகமான நடைபயிற்சி நல்லது என்றாலும், அதை படிப்படியாக அதிகரிக்கலாம். அதிக ஒருவேளை உங்களுக்கு வேகமாக நடப்பதில் சிக்கல் இருந்தால், மெதுவாக நடக்க முயற்சி செய்யுங்கள்.நீங்கள் எவ்வளவு ஸ்டெப்ஸ் நடந்தீர்கள் என்பதுடன், நீங்கள் நடந்ததற்கான நேரத்தின் கால அளவைக் குறித்து கொள்ளுங்கள். இந்த வேகமான நடைபயிற்சியானது அடிவயிற்றின் ஆழமான கொழுப்புகளை குறைக்க உதவுகிறது என்று பல வல்லுநர்கள் கூறுகிறார்கள். இன்று வெறும் கால்களில் மணலில், தரையில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
காலணி அணியாமல் வெறும் கால்களில் தரையில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்
காலணி அணியாமல் வெறும் கால்களால் நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் முக்கியமான சில நன்மைகள்:
காலணி போடுவதால் பெருமளவில் பயன்படுத்தப்படாத பாத தசைகள் வெறும் கால்களில் நடக்கும் போது நன்கு இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாதம், கணுக்கால் மற்றும் ஆடுசதைகளும் பலம் பெறுகின்றன.
வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்குவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.
மேலே குறிப்பிட்டிருக்கும் ஆய்வின் மூலம் வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.
காலணி அணியாமல் வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது.
வெறும் கால்களில் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.
வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாகவே நடைப்பயிற்சி பல்வேறு பலன்களைத் தரும் என்றாலும் குறிப்பிட்ட வகை மேற்பரப்புகளில் நடப்பது சில சிறப்பு நன்மைகளைத் தரும். வெற்றுக் கால்களில் மணலில் நடப்பதும் அத்தகைய சிறப்புப் பலன்களைத் தருகிறது.
1) கால் தசைகள் வலுவாகின்றன
காலணிகளைப் போட்டு நடப்பதை விட வெறும் கால்களில் மணலில் நடக்க கூடுதலான ஆற்றல் தேவை. மண்ணில் கால் பதிக்கும் போது பாதங்கள் புதைவதால், கால் தசைகளின் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. இவ்வாறு நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.
2) உடல் எடை குறைகிறது
சாதாரண தரையில் நடப்பதை விட மணலில் நடக்கும் போது, குறிப்பாக, வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான திறனுடன் உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
3) பாதங்களின் நலன் மேம்படுகிறது
மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது. பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.
4) பாதங்களில் உள்ள அக்குபங்க்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன
வெறும் கால்களில் மணலில் நடப்பதால், பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
5) இடுப்புப் பகுதியின் பலம் அதிகரிக்கிறது
நாம் நடக்கும், ஓடும் முறையில் இருக்கும் தவறு (wrong posture) வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது சரி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.
6) மன அழுத்தம் நீங்குகிறது
மணலில் வெறும் கால்களில் நடக்கும் போது மன அழுத்தம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது. வெறும் கால்களில் நடக்கும் போது பூமியோடு நமக்குள்ள தொடர்பு பலமாகிறது. அது நம் உடல், மன நலத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
கடற்கரையில் நடக்கும் போது கடல் அலைகளின் ஆர்ப்பரிப்போ அமைதியான கடல் அலையின் ஓசையோ நம் மனதை கொள்ளை கொள்ளும். அத்தகைய சூழலே மன அழுத்தத்தைப் போக்கவும் மன அமைதியை உண்டாக்கவும் உதவும்.