உடற்பயிற்சி

உடல் பாகங்கள் சீராக செயல்பட சைக்கிள் ஓட்டுவது அவசியம்

Published On 2023-03-27 04:31 GMT   |   Update On 2023-03-27 04:31 GMT
  • சைக்கிள் ஓட்டுவது எளிமையான உடற்பயிற்சி ஆகும்.
  • சைக்கிள் பயன்பாடு என்பது மிகவும் குறைந்து வருகிறது.

சைக்கிள் பயன்பாடு முதலில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பயன்பட்டாலும் பின்னாளில் அது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதை மக்கள் உணர்ந்தனர். ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருக்க நடைபயிற்சி, உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதுபோல் சைக்கிள் ஓட்டுவதும் அவசியம் என்பதை மக்கள் உணர்ந்தனர்.

ஆனால் மக்களிடையே தற்போது சைக்கிள் பயன்பாடு என்பது மிகவும் குறைந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் போன்றவற்றின் வரவு அதிகரிப்பால் சைக்கிள் பயன்பாடு மக்களிடையே பெரிதும் குறைந்து விட்டது என்று கூறலாம். கிராமப்புறங்களிலும் கூட தற்போது சைக்கிள் பயன்பாடு குறைந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால் மக்களிடையே உடல் ஆரோக்கியம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள், உடற்பயிற்சியாளர்கள், டாக்டர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பெங்களூருவில் வசித்து வரும் டாக்டர் ரவி கிருஷ்ணா கனராடி:-

சைக்கிள் ஓட்டுவது எளிமையான உடற்பயிற்சி ஆகும். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் தசைப்பிடிப்பு, கை-கால் மூட்டுகள், ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு இப்படி உடலில் அனைத்தும் சீராக செயல்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சியை விட சைக்கிள் ஓட்டுவது என்பது உடல் ஆரோக்கியத்துக்கு அணுகூலமானது.

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் வேலை நிமித்தமாகவும், குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு கட்டயாம் சென்றடைய வேண்டி இருப்பதாலும் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் முன்னொரு காலத்தில் சைக்கிள் பயன்பாடு முக்கிய பங்கு வகித்தது என்பதை அனைவரும் மறந்து விடக்கூடாது.

உடலில் உள்ள மூளை உள்பட அனைத்து உடல் பாகங்களும் சீராக செயல்பட உடற்பயிற்சி, நடைபயிற்சி எவ்வாறு அவசியமோ, அதுபோல் சைக்கிள் ஓட்டுவதும் அவசியம். ஆதலால் மக்கள் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். மக்கள் சைக்கிள் ஓட்டுவதை அரசும் ஊக்குவிக்க வேண்டும்.

Tags:    

Similar News