உடற்பயிற்சி

இடுப்பை பலப்படுத்தும் அஷ்வ சஞ்சாலனாசனம்

Published On 2023-06-04 07:17 GMT   |   Update On 2023-06-04 07:17 GMT
  • கால் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
  • கல்லீரலை பலப்படுத்துகிறது.

வடமொழியில் 'அஷ்வ' என்றால் 'குதிரை', 'சஞ்சாலன்' என்றால் 'ஒரு செயலில் ஈடுபடத் துவங்குவதற்கான நடவடிக்கை' என்று பொருள். இது குதிரை ஏற்றத்துக்கான தயார்நிலை என்பதால் அஷ்வசஞ்சாலனாசனம் என்று பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Equestrian Pose என்று அழைக்கப்படுகிறது. அஷ்வ சஞ்சாலனாசனம் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்தும் பயின்றும் கொண்டிருந்திருப்பீர்கள், அதாவது சூரிய வணக்கத்தை பயின்று கொண்டிருந்தால். இவ்வாசனம் சூரிய வணக்கத்தின் நான்கு மற்றும் ஒன்பதாவது நிலையில் செய்யப்படுவதாகும்.

அஷ்டசஞ்சாலனாசனத்தில் சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகத சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனம் உடல் மற்றும் மனதின் நிலையான தன்மையை வளர்க்கிறது.

பலன்கள்

முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு இடுப்பையும் பலப்படுத்துகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. கல்லீரலை பலப்படுத்துகிறது

சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. கால் தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; கால்களை பலப்படுத்துகிறது

மன அழுத்தத்தைப் போக்குகிறது. மன அமைதியை வளர்க்கிறது

செய்முறை

விரிப்பில் நிற்கவும். முன்னால் குனிந்து கால்களுக்கு அருகில் கைகளைத் தரையில் வைக்கவும். உள்ளங்கைகள் அல்லது கைவிரல்களைத் தரையில் வைக்கலாம். மூச்சை வெளியேற்றியவாறு வலது காலைப் பின்னால் கொண்டு செல்லவும். கால் முட்டி முதல் கால் விரல்கள் வரை தரையில் இருக்க வேண்டும். நேராகப் பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், ஆரம்ப நிலைக்கு வந்து இடது காலைப் பின்னால் வைத்து பயிலவும்.

கால் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். கால் முட்டியில் லேசான வலி உள்ளவர்கள் முட்டிக்கு அடியில் ஒரு விரிப்பை மடித்து வைத்து ஆசனத்தைப் பயிலலாம். நேராகப் பார்ப்பதில் அசவுகரியம் இருந்தால் தலையைக் கீழ் நோக்குமாறு வைக்கவும்.

Tags:    

Similar News