உடற்பயிற்சி

தினமும் பல் துலக்குவதுபோல் உடற்பயிற்சியை வழக்கமாக்க வேண்டும்

Published On 2023-11-27 05:30 GMT   |   Update On 2023-11-27 05:31 GMT
  • எல்லோரும் தவறாமல் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
  • உடலுக்கும் நன்மை வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்வதுதான் ஒரே தீர்வு.

காலையில் எழுந்ததும் எல்லோரும் தவறாமல் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். பல் துலக்கினால்தான் எதையும் சாப்பிட முடியும் என்ற கட்டாயத்தின் பேரிலேயே பலரும் தவறாமல் பற்களை துலக்குகிறார்கள். அப்படி சுத்தம் செய்வது வாய்வழி சுகாதாரத்திற்கு மட்டுமே நன்மை தரும். ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்வதுதான் ஒரே தீர்வு.

உடலின் சிறு பகுதியாக விளங்கும் வாய்வழி சுகாதாரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போலவே ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் உடற்பயிற்சி வடிவத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பல் துலக்குவதை போலவே உடற்பயிற்சியையும் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றும் வழக்கத்தை பின்பற்றுமாறு உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உடற்பயிற்சியை பல் துலக்குவதுடன் ஒப்பிடுவது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள். அதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

* தினமும் பல் துலக்குவது போல் உடற்பயிற்சியையும் தொடர்வது நீடித்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும்.

* உடற்பயிற்சி மற்றும் பல் துலக்குதல் ஆகிய இரண்டும் உடல் பராமரிப்பின் சிறந்த வடிவங்களாக அமைந்திருக்கின்றன. உடற்பயிற்சி மூலம் நடைபெறும் உடல் செயல்பாடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தடுக்க உதவும். அதே நேரத்தில் பல் துலக்குவது பற்கள் சார்ந்த பிரச்சினைகள் வராமல் காக்க உதவும்.

* பல் துலக்குவதை போலவே, உடற்பயிற்சியையும் வழக்கமாக்கிக்கொள்வது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும்.

* பல் துலக்குவது போலவே உடற்பயிற்சியை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம்.

பல் துலக்குவதற்கு சில நிமிடங்கள் ஒதுக்குவது போலவே தவறாமல் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். நாளடைவில் அதுவே வழக்கமான செயல்முறையாக மாறிவிடும். உடற்பயிற்சி செய்யும் நேரமும் அதிகரிக்க தொடங்கிவிடும்.

* உடற்பயிற்சி மற்றும் பல் சுகாதாரம் இவை இரண்டும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தடுப்பதற்கு வித்திடும். குறிப்பாக உடல் செயல்பாடு நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும். பல் துலக்குவது ஈறு நோய்களை தடுக்க உதவும்.

* உடற்பயிற்சி மற்றும் பல் பராமரிப்பின் மூலம் கிடைக்கும் பலன்களை உடனடியாக உணர முடியாது. ஆனால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு வித்திடும்.

* உடற்பயிற்சி, பல் பராமரிப்பு விஷயத்தில் நிலையான பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. அவ்வாறு கடைப்பிடித்தால் இவை இரண்டும் நீண்ட கால ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான செயல்திறனை அதிகப்படுத்தும்.

Tags:    

Similar News