உடற்பயிற்சி

மனஅழுத்தைத்தை குறைக்க உடற்பயிற்சி

Published On 2023-09-04 05:18 GMT   |   Update On 2023-09-04 05:18 GMT
  • இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.
  • ‘உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது.

வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள். உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டமைக்க மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களில் உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களை தடுக்கும் வல்லமையும் பெற்றது.

''உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது என்று நோயாளிகள் அடிக்கடி கூற கேட்டிருக்கிறேன். உடற்பயிற்சி செய்யும்போது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் செயல்பாடு குறைகிறது. கார்டிசோல் ஹார்மோன் அதிகமானால் இனிப்பு பதார்த்தங்களையும், கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளையும் சாப்பிட தோன்றும். இன்சுலினின் செயல்பாட்டில் மாற்றம் நிகழும். உடலில் கொழுப்பும் அதிகம் சேரும்'' என்கிறார், அமெரிக்க மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர் மார்க் ஹைமன். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தவறாமல் தினமும் பின்பற்றுவதால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

இன்சுலின் உணர்திறன்:

உடற்பயிற்சி செய்யும்போது செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராக நடைபெறும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் செயல்பாடும் சுமூகமாக நடைபெற வழிவகுக்கும். அப்படி இன்சுலின் உணர்திறன் சமநிலையில் பராமரிக்கப்படும்போது உடல் பருமன், தொப்பை பிரச்சினையும் எட்டிப்பார்க்காது.

மூளை ஆரோக்கியம்:

உடற்பயிற்சியை தொடர்ந்து வந்தால் மூளை சிறப்பாக செயல்படும். நினைவாற்றல், கற்றல் திறன், கவனிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் போது மூளை மேலும் மீள்தன்மை அடையும். அதனால் மனநிலை மேம்படும். உடல் ஆற்றலும் அதிகரிக்கும். உடலிலும், மனதிலும் அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும். மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து மனச்சோர்வு, அல்சைமர் போன்ற மன நலம் சார்ந்த பிரச்சினைகளை விலக்கி வைக்கவும் உதவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வைத்து முதுமை பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க வித்திடும்.

நாள்பட்ட நோய்கள்:

உடற்பயிற்சி பல வழிகளில் உடலுக்கு நன்மை சேர்க்கிறது. இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய், வகை ௨ நீரிழிவு, பக்கவாதம், மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

நச்சு நீக்கம்:

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் முடியும். கடுமையான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றும்போது வியர்வை வெளியேறும். அதன் மூலம் நச்சுக்களும் வெளியேறிவிடும். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளிப்படவில்லை என்றால் நீராவி பிடிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்கள், அழுக்குகள் வெளியேறிவிடும்.

கடினமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றமுடியாதவர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றலாம். மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நன்மை பயக்கும். அது ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும், நிணநீர் மண்டலத்தில் உருவாகும் அனைத்து நச்சு திரவங்களைவெளியேற்றவும் உதவி புரியும்.

Tags:    

Similar News