உடற்பயிற்சி

அதிக கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சிகள்

Published On 2024-06-23 02:28 GMT   |   Update On 2024-06-23 02:28 GMT
  • எந்த உடற்பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும்?
  • தசைகளின் செயல்பாடுகள்தான் முக்கியமானது.

உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில், 'எந்த உடற்பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும்?' என்ற கேள்வி அடிக்கடி எட்டிப்பார்க்கும். சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்பதை அறிந்திருக்கவும் செய்வார்கள். அதேவேளையில் சில பயிற்சிகள் ஏன் மற்ற பயிற்சிகளை விட அதிக கலோரிகளை எரிக்கின்றன என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

இந்த விஷயத்தில் தசைகளின் செயல்பாடுகள்தான் முக்கியமானது. அவை எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறதோ அதற்கேற்பவே பலன் கிடைக்கும். அத்துடன் வயது, பாலினம், உடல் எடை, உடல் அமைப்பு, மருத்துவ ரீதியான காரணங்கள் உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமானது.

அதிக கலோரிகளை எரிப்பதையே நோக்கமாக கொண்டவர்கள் ஆரம்பக்கட்டத்தில் ஓட்டப்பயிற்சியை தேர்ந்தெடுப்பது சரியானது. ஓடுவது இதயத்துடிப்பை திறம்பட உயர்த்த உதவும். தசை குழுக்களின் செயல்பாட்டையும் தூண்டிவிடும். அதனால் கலோரிகளை எரிக்கும் விஷயத்தில் ஓட்டம் சிறந்த தேர்வாக அமையும். சராசரியாக, ஒரு ஓட்டப்பந்தய வீரர் நிமிடத்திற்கு 12 கலோரிகளை எரிக்கிறார். நீங்கள் ஓடும் வேகம், தூரம், நிலப்பரப்பு ஆகியவற்றின் தன்மைக்கு ஏற்ப கலோரிகளை இன்னும் கூடுதலாக எரிக்க முடியும்.

ஓட்டப்பயிற்சியை விரும்பாதவர்கள் அதை விட எளிய பயிற்சியான நடைப்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு அடுத்தக்கட்டமாக நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து செய்யும் பயிற்சிகள், யோகா உள்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டும் கலோரிகளை எரிக்கலாம்.

எந்தெந்த பயிற்சிகளை மேற்கொள்வது எவ்வளவு கலோரிகளை எரிக்க உதவும் என்று பார்ப்போம்.

மிதமான உடல் செயல்பாடு (ஒரு மணி நேரத்திற்கு)

ஸ்ட்ரெட்சிங்: 180 கலோரிகள்

நிதானமாக பளு தூக்குதல்: 220 கலோரிகள்

நிதானமாக சைக்கிள் ஓட்டுதல்: 290 கலோரிகள்

நடனம்: 330 கலோரிகள்

கோல்ப்: 370 கலோரிகள்

தீவிரமான உடல் செயல்பாடு (ஒரு மணி நேரத்திற்கு) கூடைப்பந்து விளையாடுதல்: 440 கலோரிகள்

பளு தூக்குதல் : 440 கலோரிகள்

வேகமான நடைப்பயிற்சி: 460 கலோரிகள்

நீச்சல்: 510 கலோரிகள்

10 மைல் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் சைக்கிள் ஓட்டுதல்: 590 கலோரிகள்

ஓடுதல்: 590 கலோரிகள்

Tags:    

Similar News