உடற்பயிற்சி

இடுப்பை பலப்படுத்தும் உத்தித மாலாசனம்

Published On 2023-07-25 03:58 GMT   |   Update On 2023-07-25 03:58 GMT
  • அடி வயிற்றைப் பலப்படுத்துகிறது.
  • கால்களைப் பலப்படுத்தவும் செய்கிறது.

இது அர்த்த மாலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்தித நமஸ்காராசனம் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்தால் நிலையான தன்மையும் பாதுகாப்பு உணர்வும் வளருகிறது.

பலன்கள்

இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; இடுப்பைப் பலப்படுத்துகிறது. கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு கால்களைப் பலப்படுத்தவும் செய்கிறது. அடி வயிற்றைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. ஜுரணத்தை செம்மையாக்குகிறது.

செய்முறை

விரிப்பில் நிற்கவும். வலது காலை இடது காலிலிருந்து சுமார் 4 அடி இடைவெளி விட்டு தரையில் வைக்கவும். இடது காலில் உடலின் எடையை கூடுதலாகத் தாங்குமாறு நிற்கவும்.

மூச்சை வெளியேற்றியவாறே இடுப்பை கீழே இறக்கவும். இடது பாதம் தரையில் இருக்க வேண்டும். வலது கால் நன்றாக நீட்டியிருக்க வேண்டும். வலது குதிகால் தரையில் இருக்க வேண்டும்.

இரண்டு கைகளையும் வணக்கம் சொல்லும் முறையில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். 10 முதல் 20 நொடிகள் இந்த நிலையில் இருந்தபின் நீட்டிய காலை மீண்டும் மாலாசன நிலைக்குக் கொண்டு வரவும். காலை மாற்றி இதைத் திரும்பச் செய்யவும்.

தீவிர அடி முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

Tags:    

Similar News