உடற்பயிற்சியில் கண்மூடித்தனமாக நம்பப்படும் கட்டுக்கதைகள்!
- ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
- கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமானது என்பதை உணர்ந்து பலரும் பல்வேறு பயிற்சிமுறைகளை கையாளுகிறார்கள். உடற்பயிற்சி செய்யும் விஷயத்தில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அதனை கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
கட்டுக்கதை 1:
வயிற்றுப்பகுதி பருமன் இல்லாமல் 'ஸ்லிம்மாக' காட்சி அளிப்பதற்கு 'கிரெஞ்சஸ்' பயிற்சி செய்தால் போதும்.
உண்மை:
தரையில் படுத்தபடி கை, கால்களை வளைத்து செய்யும் 'கிரெஞ்சஸ்' பயிற்சியை மட்டும் மேற்கொள்வது வயிற்றுப்பகுதியை ஸ்லிம்மாக மாற்றாது. சரியான உணவுப்பழக்கத்தையும், முறையான உடற்பயிற்சிகளையும் செய்து வருவது அவசியமானது.
கட்டுக்கதை 2:
வியர்வை அதிகம் வெளியேறினால் அதிக கொழுப்பு எரிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
உண்மை:
வியர்வை என்பது கலோரி எரிக்கப்படுவதை குறிக்காது. உடற்பயிற்சி செய்யும்போதோ, வேறு ஏதேனும் உடல் செயல்பாடுகளின்போதோ, சூரியக்கதிர் வீச்சுகள் அதிகம் வெளிப்படும் சமயத்திலோ வியர்வை வெளியேறுவது உடலை குளிர்விக்கும் அங்கமாகவே அமையும். அது கொழுப்பு எரிக்கப்படுவதற்கான அறிகுறி அல்ல.
கட்டுக்கதை 3:
உடல் எடையை குறைப்பதற்கு கார்டியோ பயிற்சி செய்வதுதான் சிறந்தது.
உண்மை:
பளு தூக்குதல் உள்ளிட்ட வலிமையான பயிற்சிகளை மேற்கொள்வது உடல் எடையை குறைப்பதற்கு முக்கியமானது. அது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். தசைகளையும் வலிமைப்படுத்தும். அதற்காக கார்டியோ பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றில்லை.
கட்டுக்கதை 4:
நன்கு உடற்பயிற்சி செய்தால் போதும். ஊட்டச்சத்துமிக்க பொருட்களை உண்ணாதது பற்றி கவலைப்பட வேண்டாம்.
உண்மை:
உடற்பயிற்சியால் ஊட்டச்சத்து தேவையை ஈடுகட்ட முடியாது. உடல் எடை குறைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
கட்டுக்கதை 5:
ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அதனை நிரப்புவதற்கு சத்து மாத்திரை சாப்பிடலாம்.
உண்மை:
சத்துமாத்திரைகளால் ஊட்டச்சத்துக்களின் தேவையை முழுமையாக நிரப்ப முடியாது. உட்கொள்ளும் உணவுகள் மூலமே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
கட்டுக்கதை 6:
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவது நல்லதல்ல.
உண்மை:
உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்குவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கார்போஹைட்ரேட்டுகள் அவசியமானவை. அவற்றை அதிகம் சேர்ப்பதுதான் ஆபத்தானதே தவிர சரியான அளவில் உட்கொள்வது முக்கியமானது. ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பது நல்லதல்ல.
கட்டுக்கதை 7:
உடற்பயிற்சி செய்யும்போது வலியை அனுபவிப்பது தவறில்லை. வலி இல்லாமல் பலன் கிடைக்காது.
உண்மை:
உடற்பயிற்சியின்போது வலியை அனுபவிப்பது உடல் நலனுக்கு எந்தவொரு நன்மையையும் கொடுக்காது. உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் அசவுகரியத்துக்கும், வலிக்கும் வித்தியாசம் உள்ளது. காயம் ஏற்படும் அளவுக்கு கடும் பயிற்சியோ, காயத்துடன் பயிற்சியோ மேற்கொள்ளக்கூடாது.
கட்டுக்கதை 8:
பளுதூக்குதல் போன்ற வலிமையான பயிற்சிகளை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
உண்மை:
பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரப்பதில்லை. வலிமை பயிற்சி செய்வது தசைகளை வலுப்படுத்துவதற்குத்தான் உதவும்.
கட்டுக்கதை 9:
ஜிம்மில் அதிக நேரம் பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.
உண்மை:
உடற்பயிற்சி செய்யும் நேரத்தை விட பயிற்சியின் தரம் முக்கியமானது. அதிக நேரம் பயிற்சி செய்வது உடல் செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும்.
கட்டுக்கதை 10:
உடலின் குறிப்பிட்ட உறுப்பை மையப்படுத்தி உடற்பயிற்சி செய்வது கொழுப்பை குறைக்கும்.
உண்மை:
குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்வது அந்த பகுதிகளில் சேரும் கொழுப்பை குறைக்கும் என்று நம்புவது கட்டுக்கதைதான். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் கொழுப்பு கரையும் செயல்முறை உடல் முழுவதும் ஒரே சீராகவே நடைபெறும். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சேர்ந்திருக்கும் கொழுப்பு நீங்காது.