ஓடுவது-துள்ளி குதிப்பது: எது சிறந்தது...?
- எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
- ஸ்கிப்பிங் செய்வது உடலில் கொழுப்பை கணிசமாக குறைக்கும்.
உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அது ஒட்டுமொத்த உடற் தகுதியையும் மேம்படுத்தும் விதமாகவும், இதய தசைகளை வலுப்படுத்தும் வகையிலும், உடல் எடையையும், எலும்பு அடர்த்தியையும் சீராக பராமரிக்கும் விதமாகவும், நீண்ட ஆயுளுக்கு வித்திடுவதாகவும் அமைய வேண்டும்.
அதற்கு ஏற்ற பயிற்சிகளாக ஓடுவதும், துள்ளிக்குதிப்பதும் அமைந்திருக்கின்றன. இவைகளில் எது சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. எந்த பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது நல்லது என்று பார்ப்போம்.
இதயத்தின் சுவர்களை வலுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஒட்டுமொத்த உடல் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இதய செயல்பாடுகளை மேம்படுத்தும்.
எண்டோர்பின் மற்றும் செரோடோனின் போன்ற ரசாயனங்களை வெளியிட உதவும். இவை மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க செய்யும்.
சுவாசத்தில் கலக்கும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை அகற்றி, நுரையீரலை பலப்படுத்தும். சளி, இருமல் பிரச்சினைகளை விரட்டியடிக்கும்.
எதை தேர்வு செய்வது?
இரண்டு வகையான உடற்பயிற்சிகளும் உடல் எடை குறைப்புக்கும், ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை சேர்ப்பதாக இருந்தாலும் பயிற்சிக்காக செலவிடும் நேரத்தை கணக்கில் கொள்ளும்போது, ஓடுவதை விட துள்ளிக்குதிப்பது அதிக பலன் அளிக்கும். இருப்பினும், உடற்பயிற்சியின் போது இயற்கைக்காட்சிகளை ரசிக்க விரும்புவோருக்கு ஓடுவதுதான் சிறந்த வழி.
அதிக கலோரிகளை எரிக்க வேண்டுமா?
`ஸ்கிப்பிங்' எனப்படும் துள்ளிக் குதிப்பது, ஓடுவது ஆகிய இரண்டுமே பயிற்சி செய்ய தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள் கணிசமான எண்ணிக்கையிலான கலோரிகளை எரிக்க உதவிபுரியும். இருப்பினும், ஓடுவதுடன் ஒப்பிடுகையில், கயிற்றை கொண்டு துள்ளிக்குதிப்பது சற்று கூடுதல் நன்மையை வழங்கும். 10 நிமிடங்கள் வேகவேகமாக ஓடுவதுடன் ஒப்பிடும்போது நின்ற இடத்திலேயே துள்ளி குதித்தபடி 146 கலோரிகளை எரித்துவிட முடியும்.
ஸ்கிப்பிங் செய்வது உடலில் உள்ள கொழுப்பை கணிசமாகக் குறைக்கும், இதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளை விரட்டியடிக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டம் மற்றும் ஸ்கிப்பிங் ஆகிய இரண்டுமே இதய நலனை பாதுகாக்கக்கூடியவை.
ஓடுவது, துள்ளிக்குதிப்பது இரண்டுமே தரையுடன் நேரடி தொடர்பு கொண்டவை. இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால்களில் காயம் அடைந்தவர்களுக்கு இந்த பயிற்சிகள் கடினமானவை. மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.