உடற்பயிற்சி

ஆசனங்களின் அரசன் சிரசாசனம்: செய்முறையும் அதன் பலன்களும்...

Published On 2023-07-09 03:51 GMT   |   Update On 2023-07-09 03:51 GMT
  • கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது
  • இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். என்றும் இளமையான தோற்றத்தையும், சோம்பலை போக்கியும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் ஆற்றல் மிக்க ஆசனம்.

மூளையைச் செம்மைப்படுத்தி, அறிவாற்றலை அதிகரித்து, உடலுக்கும், முகத்திற்கும் தெளிவையும் வலுவையும், வசிகரத்தையும் தரும் ஆசனமாகும். மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா சக்கரங்களைத் தூண்டுவதன் மூலம் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துதல் ஆகியவை சிரசாசனத்தின் முக்கிய பலன்களில் சில.

பெரும்பாலான யோகப்பயிற்சியாளர்களுக்கு சிரசாசனம் பயில்வதன் மூலமே ஆசனப் பயிற்சி முழுமையடைகிறது.

மேலும் சில பலன்கள் :

மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது

முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது

நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது

நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது

ஹார்மோன்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது

தோள்களையும் கரங்களையும் பலப்படுத்துகிறது

நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது; ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது

ஆழ்ந்து சுவாசிக்க உதவுகிறது

இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது

வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது

சீரணத்தைப் பலப்படுத்துகிறது

இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது

மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது

மறு உற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது

உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்குகிறது

தூக்கமின்மையைப் போக்குகிறது

கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது

கால்களை பலப்படுத்துகிறது; கால் வீக்கத்தைப் போக்குகிறது

வெரிகோஸ் வெயின் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது

கூந்தல் நலனைப் பாதுகாக்கிறது; நரைமுடி தோன்றுவதை ஒத்திப் போடுகிறது

கவனத்தைக் கூர்மையாக்குகிறது

நினைவாற்றலை மேம்படுத்துகிறது

மன அழுத்தத்தைப் போக்குகிறது

செய்முறை

தவழும் நிலைக்கு வரவும். உங்கள் உள்ளங்கைகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.

கைகளை மடித்து முன்கைகளைத் தரையில் வைக்கவும்.

இரண்டு கைவிரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.உச்சந்தலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உள்ளங்கைகள் உங்கள் தலையின் பின்புறம் அணைத்தாற்போல் இருக்கும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு கால் முட்டிகளைத் தரையிலிருந்து உயர்த்தவும்.

மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களை உங்கள் கை முட்டி நோக்கிக் கொண்டு வரவும். இப்போது உங்கள் உடல் ஆங்கில எழுத்து 'V'-யைத் திருப்பிப் போட்டது போல் இருக்கும்.

மெதுவாக மேலும் கால்களை கை நோக்கி, உங்கள் முதுகு நேராகும் வண்ணம் கொண்டு வரவும்.

இப்போது தலையின் மீது உடல் எடையைப் போடாமல் உங்கள் முன்கைகள் பெரும்பாலும் உடல் எடையைத் தாங்குமாறு இருக்கவும்.

மெதுவாக வலது காலைத் தரையிலிருந்து மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வரவும். பின் இடது காலையும் மடித்து வலது கால் அருகே கொண்டு வரவும். பின் இரண்டு கால்களையும் மேல் நோக்கி நேராக உயர்த்தவும்.

துவக்கத்தில் சில வினாடிகள் இந்நிலையில் இருந்தால் போதுமானது. நாளடைவில் பயிலும் நேரத்தை அதிகரித்து சுமார் மூன்று முதல் 5 நிமிடங்கள் வரை சிரசாசனத்தில் இருக்கலாம்.

ஆசன நிலையிலிருந்து வெளிவர மெதுவாக வலது காலை மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வந்து பின் இடது காலை வலது கால் அருகே கொண்டு வரவும். பின் வலது காலைத் தரையில் வைக்கவும்.

பின் இடது காலை வலது கால் அருகே வைக்கவும்.

மெதுவாக இடுப்பைக் கீழிறக்கி பாலாசனத்தில் சில வினாடிகள் ஓய்வெடுக்கவும்.

குறிப்பு

ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்களும் அதிக உடல் எடை உடையவர்களும் கண்டிப்பாக சிரசாசனத்தைத் தவிர்க்கவும்.

தீவிர கழுத்துப் பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை, மூட்டுப் பிரச்சினை, அதிக இரத்த அழுத்தம், இருதய கோளாறு, கண் அழுத்த நோய், குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் சிரசாசனம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

Tags:    

Similar News