சிறுநீரகத்தை பலப்படுத்தும் நின்ற தனுராசனம்
- இடுப்பைப் பலப்படுத்துகிறது.
- இருதய நலனைப் பாதுகாக்கிறது.
இன்று நாம் பார்க்கவிருப்பது நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த ஆசனத்தைச் செய்வதனால் இரத்த ஓட்டம் செழுமையடையும், நரம்பு வீரியமாகும். உடலின் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு இளமை ஓங்கியிருக்கும்.
இந்த ஆசனத்தில் முதுகைப் பின்னோக்கி வளைக்கும்போது குறிப்பாக முதுகுத்தண்டு வளைகிறது. அதன் மூலம் தண்டுவடம் முழுவதும் உயிர்சக்தி பாய்ந்துத் தண்டைப் பலப்படுத்துகிறது. அதன் மூலம் அனைத்து உறுப்புகளுக்கும் இயக்க சக்தி அபரிமிதமாக பாய்கிறது. உயிராற்றல் வளர்கிறது. மேல் சொன்ன உயர்வான நன்மைகளுக்கு அதுவே காரணம்.
முதுகுத்தண்டு எனும் வில்லை வளைத்து, கைகளால் கால்களைப் பிடித்து நாண் பூட்டி இயக்க சக்தி எனும் அம்பை எய்வதால் இதற்கு தனுராசனம் என்று பெயர்.
பலன்கள்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை முழுமையாகப் படித்தாலே இந்த ஆசனத்தை விடாமல் செய்யத் தொடங்குவீர்கள். உங்களை மேலும் ஊக்குவிக்க, இதோ, நின்ற தனுராசனத்தின் மேலும் சில பலன்கள்:
இடுப்பைப் பலப்படுத்துகிறது. நுரையீரலின் செயல்பாடுகளைச் செம்மையாக்குகிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது. கழுத்து மற்றும் தோள்களின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. ஜீரணக் கோளாறுகளைச் சரி செய்கிறது.
முதுகு வலியைப் போக்க உதவுகிறது. சிறுநீரகத்தைப் பலப்படுத்துகிறது.
செய்முறை
இரண்டு கால்களுக்கு இடையில் ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி விட்டு விரிப்பில் நிற்கவும். கைகளை முதுகுக்கு பின்னால் வைக்கவும்.
மூச்சை இழுத்தவாறே பின்னால் வளையவும். வளைந்த நிலையிலே ஒவ்வொரு கையாக கால் முட்டிக்குச் சற்று கீழ் வைக்கவும். 20 வினாடிகள் சாதாரண மூச்சில் இந்த நிலையில் இருந்த பின், மூச்சை வெளியில் விட்டவாறே பழைய நிலைக்கு திரும்பவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.
கழுத்து, தோள், இடுப்பு, முதுகு ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் நின்ற தனுராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.