ஜிம்முக்கு செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்
- உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.
- பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும்.
பிட்டான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம்.
ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடல்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் மயக்கம், வாந்தி அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் சுயநினைவு இழக்க நேரிடும். மாவுச்சத்து அதிகம் உள்ள திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பயிற்சி முறை
ஜிம் பயிற்சிகள் சிக்கலானவையாக இருக்கலாம். சரியான முறையில் பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும். அதேபோல, புதிய பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் பயிற்சியாளரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வது அவசியம் தான். இருப்பினும், அளவிற்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடும். பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு மட்டுமே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.