வயிறு, இடுப்பில் உள்ள அதிக சதையை கரைக்க உதவும் ஆசனம்...
- முதுகுத்தண்டை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது.
- இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
வடமொழியில் 'த்ரி' என்றால் 'மூன்று', 'அங்க' என்றால் 'அங்கம்', 'முக' என்றால் 'முகம்', 'ஏக' என்றால் 'ஒன்று', 'பாத' என்றால் 'பாதம்', 'பஸ்சிமா' என்றால் 'மேற்கு', 'உத்தானா' என்றால் 'மிகுவாக நீளுதல்' என்று பொருள். நாம் முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கும் பஸ்சிமோத்தானாசனத்தையும் ஜானு சிரசாசனத்தையும் ஓரளவு ஒத்த ஆசனமாகும். இது ஆங்கிலத்தில் One Leg Folded Forward Bend என்று அழைக்கப்படுகிறது.
த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம் மற்றும் சுவாதிட்டானம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. நிலையான தன்மை, படைப்புத்திறன், தன்னம்பிக்கை அதிகரித்தல் மற்றும் பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்பு உருவாகுதல் ஆகியவை இச்சக்கரங்கள் தூண்டப் பெறுவதால் ஏற்படுகின்றன.
பலன்கள்
முதுகுத்தண்டை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. பின்புற உடல் முழுமையையும் நீட்டிக்கிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியை வலுவாக்குகிறது; இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. சீரண இயக்கத்தை மேம்படுத்தி சீரணக் கோளாறுகளால் ஏற்படும் தலைவலியைப் போக்குகிறது. மறுஉற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
வயிறு, மற்றும் இடுப்பில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது; மாதவிடாய் நேரத்து வலிகளையும் போக்குகிறது. சிறு வயது முதல் இவ்வாசனத்தைப் பயின்று வந்தால் தட்டைப் பாதம் சரியாகிறது. மன அமைதியை ஏற்படுத்துகிறது. மனதை ஒருமுகப்படுத்துகிறது.
செய்முறை
விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும். வலது காலை வெளிப்புறமாக மடித்து பாதம் வலது புட்டத்திற்கு அருகில் வருமாறு வைக்கவும். நேராக நிமிர்ந்து, மூச்சை வெளியேற்றியவாறு கைகளை முன்னோக்கி நீட்டியவாறு முன்னால் குனிந்து இடது பாதத்தைப் பற்றவும். நெற்றியை இடது காலின் முட்டி அல்லது அதற்கும் கீழாக வைக்கவும். 20 வினாடிகள் இந்நிலையில் இரு ந்தபின் ஆரம்ப நிலைக்கு வரவும். இடது காலை மடித்து இதை மீண்டும் செய்யவும்.
முதுகுத்தண்டு, இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரக் கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
பாதத்தைப் பிடிக்க இயலவில்லையென்றால் கை எட்டும் இடத்தில் பிடிக்கவும். அல்லது, yoga belt-ஐ காலில் சுற்றிப் பிடிக்கவும். காலை நீட்டி வைப்பதில் கடினம் ஏற்பட்டால் கால் முட்டி அல்லது இடுப்பிற்கு அடியில் மடித்த கம்பளத்தை வைத்து ஆசனத்தைப் பயிலவும்.