நடைப்பயிற்சி செய்யும் ஆர்வத்தை தூண்ட செய்ய வேண்டியவை...
- ஆரம்பத்தில் 1 கி.மீ தூரம் நடந்தால் போதும்.
- தினமும் 3 கி.மீ தூரமாவது நடக்க வேண்டும்.
நடை ஒரு நல்ல உடற்பயிற்சி. 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி அரை மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடக்கலாம். தினமும் 3 கி.மீ தூரமாவது நடக்க வேண்டும். புதிதாய் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஆரம்பத்தில் 1 கி.மீ தூரம் நடந்தால் போதும். பலன்களை முழுமையாகப் பெறத் திறந்தவெளி நடைப்பயிற்சிதான் ஏற்றது.
ஆர்வமாக நடைப்பயிற்சியைத் தொடங்கி சிறிது நாட்களிலேயே அதை கைவிடுபவர்கள் உண்டு. விடிகாலை எழுந்து, தயாராகி, வீட்டிற்கு வெளியே காலடி எடுத்து வைப்பது சிலருக்கு சவாலாக இருக்கலாம். உங்களின் சுய ஊக்கத்திற்காகவென்று நீங்கள் இலக்குகளைத் தீர்மானித்துக் கொள்வது உங்களுக்கு பயிற்சிக்கான உத்வேகத்தை அளிப்பதோடு கூடுதல் பலன்களையும் அளிக்கும்.
இதோ சில உதவிக் குறிப்புகள்:
தேவை: நடைப்பயிற்சி செய்வதற்கான தேவையை ஒட்டி உங்கள் இலக்கை அமைத்துக் கொள்ளலாம். உடல் எடைக் குறைப்பு என்பது இலக்காக இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட அளவு எடை குறைப்பதை இலக்காக வைத்துக் கொள்ளலாம். சர்க்கரை அளவு, அதிக இரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்வதற்கும் இலக்குகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம். பொதுவான உடல் நலத்திற்கான நடைப்பயிற்சி என்றால் அடுத்த இலக்கை நோக்கிப் போகவும்.
நேர நிர்ணயம்: முதலில் 15 நிமிடத்தில் தொடங்கி அய்ந்து நிமிடங்களாகக் கூட்டி நாளொன்றுக்கு 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்யலாம். பொதுவாக, வாரம் அய்ந்து நாட்கள் வேக நடை பயிலலாம். வாய்ப்புள்ளவர்கள் 40 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை நடக்கலாம்.
தூர நிர்ணயம்: நேரத்துக்கான இலக்கைப் பின்தொடர்வது அந்த குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்கிற தூர நிர்ணயம். உதாரணத்திற்கு, துவக்கத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க உங்களுக்கு 20 நிமிடம் பிடித்தால் அதைக் குறைந்த நேரத்தில் நிறைவு செய்வதற்கான இலக்கைத் தீர்மானித்துக் கொள்ளலாம். நடக்கும் தூரம், வேகம் ஆகியவற்றை கணக்கெடுப்பதற்கான app-கள் உள்ளன. "எங்களுக்கு எந்த app-ம் வேண்டாம்" என்பவர்கள், பொதுவாகத் தாங்கள் நடக்கும் தூரத்தை வழக்கத்தை விடக் குறைந்த நேரத்தில் நிறைவு செய்வதற்கான இலக்கைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
செருப்பைத் தவிர்த்து விட்டு, நடைப்பயிற்சிக்கான காலணி போட்டு நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானது. வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்வதும் பல நன்மைகளைத் தரும்.
இனியும் கால தாமதம் செய்யாமல் உடனே நடக்கச் செல்லுங்கள், சோம்பேறித்தனத்தை விரட்டி எளிய நடைப்பயிற்சி மூலம் நோயின்றி வாழலாம்