வாழ்வின் உச்சபட்ச புரிதலை உணர்வது தான் யோகா
- உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணருவதே யோகா.
- நீங்கள் யோகா செய்யும்போது அதிகப்படியான எடை கண்டிப்பாக குறைந்துவிடும்.
நீங்கள் விரும்பும்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது உங்கள் உடலையும், மனதையும் எப்போதுமே சுறுசுறுப்பாக, உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? யோகா மற்றும் தியானம் செய்ய தொடங்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று எதுவும் தெரியாது. உடலையும் மனதையும் நமக்கு தேவையானபடி பயன்படுத்தும் இந்த யோக விஞ்ஞானம் எப்படி தொடங்கியது, நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றிய முழுமையான தொகுப்புதான் இந்த பதிவு.
மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலைகீழாக நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல. எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும். உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணருவதை யோகா என்று சொல்கிறோம். அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
ஒரு ஆசனம் என்பது உடல் இருக்கும் ஒரு நிலை. உங்களது உடல் எண்ணற்ற நிலைகளை எடுக்க முடியும். குறிப்பிட்ட நிலைகள், `யோகாசனங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. "யோகா" என்றால், உயர்நிலைப் பரிமாணங்களுக்கோ அல்லது வாழ்வின் உச்சபட்ச புரிதலை நோக்கியோ உங்களை அழைத்துச் செல்வது. எனவே ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி உங்களை வழி நடத்தக்கூடிய உடல் இருப்பு நிலை "யோகாசனம்" என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் யோகா செய்யும்போது, உங்களது அதிகப்படியான எடை கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஓர் உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை. அது உங்கள் உடல் அமைப்புகளுக்கு புத்துணர்ச்சி அளித்து, நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்கும் தன்மையை உங்களுக்குள் கொண்டுவந்து விடுகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புத்தன்மை வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும்தான் உடல் உண்ணும். அதற்கு மேல் எதையும் ஏற்றுக்கொள்ளாது.
ஆனால் உடற்பயிற்சிகளையோ, நடைபயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகா பயிற்சிகள் செய்து வரும்போது, உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும்.
நீங்கள் அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்ளத அளவுக்கு உங்கள் உடல் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்கிறது. இதுதான் யோகாவில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும்.
உடல், மனம், உணர்வு, சக்தி என உங்கள் வாழ்க்கையில் நான்கு உண்மைகள்தான் உள்ளன. எனவே உங்களுக்கு நீங்கள் என்ன செய்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்களோ அவை இந்த நான்கு தளங்களில் மட்டுமே நிகழமுடியும். நீங்கள் செய்ய விரும்புவதை உங்கள் உடல் மூலமாகவும், உங்கள் மனம் மூலமாகவும், உங்கள் உணர்வுகள் மூலமாகவும், உங்கள் சக்திகள் மூலமாகத்தான் செய்ய முடியும். உணர்வுகளை பயன்படுத்தி உச்சநிலையை எட்டிவிட முடிந்தால் அதற்கு பக்திநிலை என்று பெயர்.